வெவ்வேறு வகையான தேவைகளுடைய பயணிகளுக்கு உதவ எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் அனைவரையும் உள்ளடக்கும் திட்டம் நடப்பில் உள்ளது. அத்தகைய உதவிகளுக்குப் பேருந்து ஓட்டுநர்கள், எம்ஆர்டி நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் ஆகியோரைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அந்தத் திட்டம்.
இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்தத் திட்டம் வாயிலாகப் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான திரு லெஸ்லி இயோ டௌன்டவுன் எம்ஆர்டியின் மூத்த வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக உள்ளார். பயிற்சி பெறுவதற்கு முன்புவரை பார்வைக் குறைபாடு உள்ள அல்லது சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு எப்படி உதவுவது என்று தமக்குத் தெரியாது என்று கூறும் அவர், தற்போது அப்படி இல்லை என்கிறார்.
பயிற்சிக்குப் பின்னர் முற்றிலும் மாறுபட்ட முறையில் அவர் செயல்படுகிறார்.
வெவ்வேறு தேவையுள்ள பயணிகளிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு மரியாதை கலந்த உதவியை அவர் வழங்கிவருகிறார்.
குறிப்பாக, பார்வைக் குறைபாடுள்ள பயணியை தமதுக் கையைப் பிடித்துக்கொள்ளுமாறும் தமது தோளில் கை வைத்துக்கொள்ளுமாறும் கூறுவார். அதேபோல, சக்கர நாற்காலிப் பயணிகளைக் கண்டதும், உதவி தேவையா என்று கேட்பார்.
எதுவும் கேட்காமல் திடீரென உதவிக்குச் செல்வது அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும் என்பது திரு இயோவின் கருத்து.
திட்டத்தின் ஒரு பகுதியாக ‘அனைத்தையும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்துப் பயிற்சி மையத்தை (PTITC)’ எஸ்பிஎஸ் டிரான்சிட் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) திறந்தது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சிங்கப்பூர்ப் பேருந்துப் பயிற்சிக்கழகம், எஸ்ஜி எனேபல் அமைப்பு ஆகியவற்றின் பங்காளித்துவத்துடன் அந்த மையத்தை அது நிறுவி உள்ளது.
சிலேத்தார் பேருந்துப் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் லாங்கும் பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைவர் ஜேனட் ஆங்கும் திறந்து வைத்தனர்.

