டிரான்ஸ்-கேப், ஜியோலா ஆகிய இரு நிறுவனங்களுக்கு முழுமையான தனியார் வாடகை வாகனச் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளன.
அந்நிறுவனங்களின் ஓராண்டுக்கான தற்காலிக உரிமம் இவ்வாண்டின் இறுதியில் காலாவதியாகும் நிலையில், நிலப் போக்குவரத்து ஆணையம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரான்ஸ்-கேப்பும் ஜியோலாவும் தனியார் வாடகை வாகனச் சேவைக்கான முழு உரிமம் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஒழுங்குமுறை தரநிலைகளைப் பூர்த்தி செய்துவிட்டதாகத் தெரிவித்தது.
சிங்கப்பூரில் ஏற்கெனவே முழுமையான உரிமத்துடன் இயங்கிவரும் கிராப், ரைட், டடா, கோஜெக், ஜிக் ஆகியவற்றுடன் இணைந்து இவ்விரு நிறுவனங்களும் சேவை வழங்கவுள்ளன.
அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை செல்லுபடியாகும்.
சிங்கப்பூரில் மூன்றாவது பெரிய டாக்சி சேவையை வழங்கும் டிரான்ஸ்-கேப்பிடம் 1,948 வாகனங்கள் உள்ளன. ஜியோலா நிறுவனம் கைப்பேசிச் செயலி வழி சொகுசு கார் சேவை மற்றும் பொட்டலங்கள் விநியோகம் ஆகியவற்றில் உள்ளது.
டிரான்ஸ்-கேப், ஜியோலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டுக்கான தற்காலிக உரிமம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
மூன்று ஆண்டு முழு உரிமத்திற்குத் தேவையானப் பாதுகாப்பு, சேவை வழங்குவதற்கான ஒழுங்குமுறை தரநிலைகளை அந்நிறுவனங்கள் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் நிலப்போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவும் அந்தத் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
800 அல்லது அதற்கு மேற்பட்ட முன்பதிவு செய்யக்கூடிய வாகனங்களைத் தங்கள் தளங்களில் வைத்திருக்கும் தனியார் வாடகை வாகன நிறுவனங்கள், நிலப் போக்குவரத்து ஆணைய ஒழுங்குமுறை கட்டமைப்பால் வகுக்கப்பட்ட உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
டிரான்ஸ்-கேப், ஜியோலாவுக்கு முன்பு, 2021ஆம் ஆண்டு முழு உரிமத்தையும் பெற்ற கடைசி வாடகை வாகன நிறுவனமாக ரைட் இருந்தது.

