தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உருமாறிவரும் மனநல சுகாதாரச் சேவைக் கட்டமைப்பு

2 mins read
8cfee649-6b6c-4f10-b910-72af5e457cff
கோப்புப் படம்: - இணையம்

சிங்கப்பூரில் தற்போது அரசாங்க மனநல சுகாதாரச் சேவைகளைப் பெற காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமாக இருந்து வருகிறது.

“சமூக அளவில் (மனநல சுகாதார) சேவைகளைப் பெறமுடிந்தால், சேவைகளை வழங்குவோர் பலர் இருந்தால் மேம்பட்ட சேவைகளை சீக்கிரமாகப் பெறமுடியும்,” என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

புதிய மனநல சுகாதாரச் சேவை கட்டமைப்பின்கீழ் சமூக அளவில் சேவைகள் சரிவர வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் சம்பந்தப்பட்ட குடும்ப மருத்துவர்கள், தாதியர், சமூக சேவையாளர்கள், தொண்டூழியர்கள் என அனைவரும் சீரான முறையில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான ஆதரவை வழங்குவர்.

மனநலச் சேவைகளை நாடுவதற்கென தற்போது 200க்கும் மேற்பட்ட வழிமுறைகள் உள்ளன. சிறப்புத் தொலைபேசி எண்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், மின்னிலக்கத் தளங்கள், நேரடிச் சேவைகள் போன்றவற்றின் மூலம் சிங்கப்பூரர்கள் மனநலச் சேவைகளைப் பெறமுடியும்.

ஆனால் மக்களுக்கு அவற்றைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம் அல்லது எப்படி உதவி நாடுவது என்று புரியாமல் இருக்கலாம்.

அப்படியிருக்கையில் அவரவர் தங்களுக்குத் தேவையான பராமரிப்புச் சேவைகளைப் பெற வகைசெய்யும் கட்டமைப்பை உருவாக்குவது இலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“மனநல சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் தேவைப்படுவோர் தொடக்கத்திலேயே மனநலக் கழகத்தை நாடும் நிலை இருக்கக்கூடாது. முதலில் சம்பந்தப்பட்டோர் மற்ற வழிகளின் வாயிலாக சேவைகளை நாடு நிலை இருக்கவேண்டும். சிறப்புத் தொலைபேசி எண், குறுந்தகவல்களை மையமாகக் கொண்டு இயங்கும் தளங்கள், இணையத்தளங்கள், நிலையங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்,” என்றார் டாக்டர் ஜனில். மாறிவரும் மனநலச் சூழலைப் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு விவரித்தார்.

உள்ளூரிலும் உலகளவிலும் மனநலன் மோசமடைந்து வருகிறது. அதனால் தேசிய அளவிலான இலக்குகளில் அரசாங்கம் மனநலனுக்கும் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் அரசாங்கத் துறையில் பணியாற்றும் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையை 30 விழுக்காடு அதிகரிக்கவுள்ளதாகவும் மனநல ஆலோசகர்களின் (psychologists) எண்ணிக்கையை 40 விழுக்காடு அதிகரிக்கப்போவதாகவும் அரசாங்கம் இவ்வாண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது. அதோடு, 2030க்குள் ஹெல்தியர் எஸ்ஜி இயக்கத்தின் நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ் குடும்ப மருத்துவர்கள் அனைவரும் மனநலச் சேவைகளை வழங்குவர், அனைத்து 32 பலதுறை மருந்தகங்களும் மனநலச் சேவைகளை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்