சிங்கப்பூரில் நம் சுற்றுப்புறம் ஒருபோதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. ஏதாவது ஒரு வகையில் மேம்பாடுகள், புதுப்பிப்புப் பணிகள் நம்மிடையே நடந்துகொண்டே இருக்கும் என்பதை நீண்டநாள் இங்கு வசிக்கும் நாம் நன்கு உணர முடிகிறது.
வசிப்பிடங்களும் நகரங்களும் உருமாறிக்கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஒருவர் கல்வி பயிலும் காலம் முதல் முதுமை வரையில் சிங்கப்பூரின் உருமாற்றம் தொடர்கதையாகும்.
நம் நாட்டின் மீன்பிடி கிராமங்கள் 50 ஆண்டுகளில் பரபரப்பான நகரங்களாகி, உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இன்று நவீன வசதிகளுடன் வளர்ந்துள்ளன. உள்கட்டமைப்பு வளர்ந்தாலும் சில இழப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் அதேவேளையில் அத்தியாவசியத்தையும் கருத்தில்கொண்டு, கடந்த கால நினைவுகளைத் தட்டியெழுப்பும் சில இடங்கள் மறைவது நகர மறுசீரமைப்பில் ஒரு தொடர் போராட்டம்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிங்கப்பூரின் நிலப் பயன்பாடு மறு ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான கட்டுமானத் திட்டங்கள் ஆராயப்படுகின்றன. ஒவ்வொரு நிலப் பரப்பும் எவ்வாறு பயன்படும் என்று ஆழமாகப் பரிசீலிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, அரசாங்கம் 2025ஆம் ஆண்டின் பெருந்திட்ட வரைபடத்தை வெளியிட்டது. அதனுள் பொது இடங்கள், வர்த்தகக் கட்டடங்கள், பள்ளி வளாகங்கள் என நாட்டு நிலப்பரப்பின் அனைத்து அம்சங்களையும் நிபுணர்கள் பார்வையிட்டு பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.
முக்கியமாக 10 பள்ளிகள் இருந்த இடம் மறுசீரமைக்கப்பட்டு, சில ஒருங்கிணைக்கப்படுகின்றன. குறைந்துவரும் இளையர் சமுதாயமும், பெருகி வரும் முதியோர்களும் அதற்கு ஒரு காரணம். 1980ஆம் ஆண்டுகளில் பெருகிய இளம் மக்கள் தொகையின் வீழ்ச்சியைக் காணும் காலம் இதுவாகும்.
பள்ளிகள் இருந்த இடங்களில் வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் வர்த்தகக் கட்டடங்கள் அண்மையில் குடியிருப்புகளோடு ஒருங்கிணைந்த பேரங்காடிகளாக உருமாறியுள்ளன. இதுவும் நகர மறுசீரமைப்பின் வடிவமே. அத்தகைய கட்டடங்களில் முதல் சில மாடிகளில் கடைகள், உணவங்காடிகள் அமைந்திருக்கும். அவற்றுக்கு மேல் பலமாடிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஒருகாலத்தில் அலுவலகங்கள் மட்டும் செயல்பட்ட கட்டடங்கள் இன்று குடியிருப்புகளோடு மேம்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் அந்தப் பெருந்திட்டத்தை வெளியிடுவதற்கு முன்பாக ஜூன் 26ஆம் தேதி நகர மறுசீரமைப்பு ஆணைய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கென கண்காட்சியில் அதனை வைத்தது. நகரில் 14 இடங்களுக்கு அது கொண்டுசெல்லப்பட்டுப் பலரின் கருத்துகள் வரவேற்கப்பட்டன.
கண்காட்சியோடு பல நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தேசிய நலனுடன் சிங்கப்பூரர்களின் தனிப்பட்ட கருத்துகளும் பெருந்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுமார் 250,000 மக்கள் அந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

