சிங்கப்பூர் புத்தக மன்றத்தால் தொடங்கப்பட்ட ‘மொழிபெயர்ப்பு நாள் சிங்கப்பூர்’ நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை (செப்டம்பர் 26) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் தி ஆர்ட்ஸ் ஹவுசில் அது நடைபெறும்.
நிகழ்ச்சியில் உள்ளூரையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 10 மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு பன்மொழித்தன்மை, மொழிபெயர்ப்புக் கலை உள்ளிட்ட அம்சங்களை ஆராய்வர்.
அனைத்துலக ‘புக்கர்’ பரிசு வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளரான தீபா பாஸ்தி, நாடக ஆசிரியர் அல்ஃபியான் ச’ஆட், பிரபல மொழிபெயர்ப்பாளர் ஷன்னா டான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
சொற்களை மொழிபெயர்க்கும்போது கதைகளும் அனுபவங்களும் உலகைப் பார்க்கும் பார்வையும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை விளக்கும் அங்கங்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
நிகழ்ச்சிகளில் இலவச, கட்டணத்துடன் கூடிய நிகழ்ச்சிகள் அடங்கும். கட்டணம் செலுத்த எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைப் பயன்படுத்த முடியும்.
நிகழ்ச்சிகளின் முழுப் பட்டியலையும் பதிவு விவரங்களையும் https://www.bookcouncil.sg/translation-day-singapore-2026/tdsg-tickets என்ற சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் இணையத்தளத்தை நாடலாம்.
