ஜோகூர் பாரு - ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், சிறப்பு நிதி வட்டாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க ஃபாரஸ்ட் சிட்டி அதன் போக்குவரத்துக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜோகூர் பாருவில் தடையற்ற பொதுப் போக்குவரத்தை உருவாக்க கன்ட்ரி கார்டன் பசிபிக்வியூ கட்டுமான நிறுவனமும் காஸ்வே லிங்க் பேருந்து நிறுவனமும் இணைந்து ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள பேருந்துப் பாதைகளைக் கூடுதலாக மேம்படுத்தவிருக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக ஃபாரஸ்ட் சிட்டியில் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்ட பேருந்துக் கட்டமைப்பு ஜோகூர் பாரு பேருந்துக் கட்டமைப்புடன் இன்னும் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்படும்.
அது பேருந்துப் பயணங்களை இன்னும் சுமுகமாக்கும்.
கன்ட்ரி கார்டன் பசிபிக்வியூ கட்டுமான நிறுவனம் ரயில் போன்ற இதர போக்குவரத்து வசதிகளையும் உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்தது.
எடியுசிட்டி, என்எஸ்கே நூசாஜெயா, ஏயோன் புக்கிட் இண்டா ஆகிய கடைத்தொகுதிகளை இணைக்கும் தற்போதைய பாதைகளையும் வலுப்படுத்துவது நிறுவனத்தின் திட்டங்களில் அடங்கும்.
இதற்குமுன் மேம்படுத்தப்பட்ட பேருந்துக் கட்டமைப்பின் முன்னோட்ட சோதனை பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது.
அதே மாதம் 16ஆம் தேதி பேருந்துச் சேவைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புப் பொருளியல் வட்டாரம், சிறப்பு நிதி வட்டாரம் ஆகியவற்றின் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதில் மாநில அரசாங்கம் உறுதியாக இருப்பதாய் ஜோகூர் கட்டுமான, போக்குவரத்து, உள்கடமைப்பு, தொடர்புக் குழு குறிப்பிட்டது.
ஒவ்வொரு நாளும் 300,000லிருந்து 400,000 பேர் இணைப்புப் பாதைகள் மூலம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் சென்று வருகின்றனர்.
எனவே, போக்குவரத்து, அதிவேக ரயில் கட்டமைப்பு போன்றவை எந்த அளவு முக்கியம் என்பதை அறிந்திருப்பதாகக் குழு சொன்னது.