சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர், நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை முறைகளை டிக்டாக்கில் நேரலை செய்து, அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
‘கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்’ (Complaint Singapore) குழுமத்துக்கு பயனாளர் ஹஸ் ஃபார்ரா என்பவர் இது குறித்து ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
@கிறிஸ்ஹெல்லா என்ற பெயரில் உள்ள டிக்டாக் கணக்கை வைத்திருக்கும் அந்த ஊழியர், காணொளிகளில் அணிந்திருக்கும் சீருடையை வைத்து அவர் ‘அசியானா கேர்டேக்கர்’ தாதிமைக் குழுமத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
அந்தக் காணொளிகளில் நோயாளிகளின் அடையாள எண்கள், மருந்துத் தகவல்களும் பகிரப்படுவதாக ஹஸ் ஃபார்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு காணொளியில், நோயாளி ஒருவர் ‘சிகிச்சையின்போது கடுமையான வலியில்’ இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
‘அசியானா கேர்டேக்கர்’, சிங்கப்பூர் தாதிமைக் கழகம், மனிதவள அமைச்சு, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) ஆகியவை இது குறித்து விசாரிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
பதிவுக்குப் பதிலளித்த ‘அசியானா கேர்டேக்கர்’, அந்த விஷயத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
நோயாளிகளின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதில் கடுமையாக இருப்பதாகவும் நிலைமையைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
நோயாளிகளின் ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமை குறித்த தங்களது உறுதிப்பாட்டை வலுப்படுத்த நிறுவனத்தின் கொள்கைகள், நடைமுறைகளை மறுஆய்வு செய்வதாகவும் அது கூறியது.
அந்த டிக்டாக் கணக்கும் நீக்கப்பட்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டது.
“அச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கக்கூடிய மனவேதனை அல்லது கவலைக்கு மன்னிப்புக் கோருகிறோம்,” என்று அது குறிப்பிட்டது.

