நாணய மாற்றுக்காரரை தந்திரமாக ஏமாற்றிய விவகாரம்; சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்

1 mins read
5d4b1b90-370c-4b82-9f00-5e30974063c9
படம்: காவல்துறை -

நாணய மாற்றுக்காரரை தந்திர மாக ஏமாற்றிய விவகாரத்தில் சம்பவ இடத்துக்கு இரு சந்தேக நபர்களையும் அழைத்து வந்து நேற்று காவல்துறை விசாரணை நடத்தியது.

சென்ற வெள்ளிக்கிழமை கோல்மேன் ஸ்திரீட்டில் உள்ள நாணய மாற்றுக்காரர் பணம் திருட்டுப்போனதாக தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறை யினர் துரிதகதியில் விசாரணையில் இறங்கினர்.

முன்னதாக 45, 54 மதிக்கத்தக்க இருவர், நாணய மாற்றுக்காரரைத் தொடர்புகொண்டு சிங்கப்பூர் வெள்ளியை மாற்றுவதற்கான ரொக்கத்தைத் தயாராக வைத்திருக்கும்படி கூறியுள்ளனர்.

மாலை 4.30 மணிக்கு அங்கு வந்த இருவரும் நாணய மாற்றுக்காரரிடம் பணமுள்ள பையை சரிபார்க்க ஒப்படைக்கும்படி தெரிவித்தனர்.

பின்னர் பணத்தை திரும்ப தருவதுபோல ஒரு பையை கொடுத்துவிட்டு, சிங்கப்பூர் வெள்ளி மற்றும் கடவுச்சீட்டு களுடன் பின்னர் வந்து பணத்தை மாற்றிக்கொள்வதாகச் சொல்லி அவர்கள் சென்றனர்.

ஒரு மணி நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த நாணய மாற்றுக்காரர் அவர்கள் விட்டுச் சென்ற பையைத் திறந்துபார்த்தார்.

அதில் ஒரு யுஎஸ் டாலர், 100 யுஎஸ் டாலர் சில கட்டுகளும் போலி யூரோ நோட்டுகளும் இருந்தன. அப்போதுதான் தான் கொடுத்த பணத்தை இருவரும் எடுத்துச் சென்றுவிட்டனர் என்பதை நாணய மாற்றுக்காரர் உணர்ந்தார். இதையடுத்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்குப் புறப்படதயாரான விமானத்தில் இருந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 74,600 யுஎஸ் டாலர், மின்னிலக்கச் சாதனங்கள், குற்றச்செயல் புரிந்தபோது அணிந்திருந்த ஆடைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்