வேண்டியவை அனைத்தும் இருந்ததில்லை என்றபோதும் இருப்பவற்றை வைத்து நிறைவாக வாழ்வது எப்படி என்பதைப் பெற்றோரிடம் கற்று இன்றுவரை சேவையாற்றி வருகிறார் திரு பெஞ்சமின் வில்லியம், 67.
இந்தியக் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து கம்போங்கில் வளர்ந்தவரான திரு பெஞ்சமின், சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமைச் செயலாளர்.
முந்நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல்லாயிரம் தொண்டூழியர்களைக் கொண்ட அமைப்பு அது. உலகமே பேசும் காஸா முதல் உலக வரைபடத்தில் மட்டுமே இடம்பெற்று பலரும் அறிந்திடாத நாடுகளுக்கும் உதவிப் பொருள்கள் உரிய நேரத்தில் சென்றடைய ஓய்வின்றிச் சுழலும் செஞ்சிலுவைச் சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர் திரு பெஞ்சமின்.
அரசதந்திர அதிகாரியாக 30 ஆண்டுக்கும் மேல் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த பெஞ்சமின், தாம் ஒரு ‘தற்செயல் மானுடவியலாளர்’ என்று கூறிப் புன்னகைத்தார்.
ஈராண்டுக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தை வழிநடத்த முடியுமா என்று இவரிடம் பல்லாண்டுக்கு முன்பு கேட்கப்பட்டதாகவும் அப்போது கொஞ்ச காலம்தானே என்று நினைத்து ஒப்புக்கொண்டதாகவும் அவர் சொன்னார். ஆனால் 15 ஆண்டுகள் நெருங்கும் இவ்வேளையில் இதுவரை வேறு எங்கும் செல்ல மனத்திற்கு தோன்றவில்லை என்றார் திரு பெஞ்சமின்.
சிறுவயதில் குடும்பம் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை நினைவுகூர்ந்தார் அவர்.
‘‘அப்பாவுக்குப் பெரிய அளவில் வருமானம் இருந்ததில்லை. என்றாலும் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை வெறும்கையுடன் அம்மா அனுப்பியதே இல்லை. இருப்பவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இரண்டறக் கலந்துவிட்டது,’’ என்றார் அவர்.
பெற்றோர், தேவாலயம், பயின்ற ‘செயின்ட் கேப்ரியல்‘ தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என அனைத்தும் சமூக நலமே நம் நலம் எனும் பண்பைத் தம்முள் ஆழமாக வேரூன்றச் செய்ததாகத் திரு பெஞ்சமின் கூறினார். அதிலிருந்து எப்படியாவது, ஏதாவது ஒரு வகையில் பிறர் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை மலரச் செய்ய வேண்டும் என்பது தம் இலக்காக மாறிப்போனது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
போரால் அவதியுறும் அனைத்துலக உறவுகளுக்கு உதவிப்பொருள்கள் அனுப்புவது ஒருபுறம் முக்கியம் என்றால், உள்ளூரில் உதவி நாடும் மக்களுக்குக் கைகொடுப்பதும் இன்றியமையாதது என்பதே தமது நம்பிக்கை என்று திரு பெஞ்சமின் கூறினார்.
‘‘சிங்கப்பூரர்களுக்கு உதவி தேவைப்படுமா? இங்கு எல்லோரும் செழிப்பாகத்தானே உள்ளனர் என்று நினைப்போர் உண்டு. இங்குப் பஞ்சமும் பசியும் இல்லை என்பது பொதுவாக உண்மை என்றாலும், வாழ்வின் போராட்டங்கள் நிச்சயம் உண்டு.
‘‘அவ்வகையில் ஒவ்வொருவரும் சுற்றியிருக்கும் சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த எதையாவது செய்து கனிவுடன் பரிவுமிக்கச் சூழலை உருவாக்குதல் முக்கியம் என்றார் திரு பெஞ்சமின்.
குறிப்பாகச் செஞ்சிலுவைச் சங்கம் என்றாலே மக்களின் மனத்தில் முதலில் வருவது ரத்த தானம் என்பதைச் சுட்டிய அவர், அதன் தொடர்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
‘‘நம் சமூகம் மூப்படைந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனவே எதிர்காலத்தில் சமூக சேவைகள் சீராக நிகழ்ந்திட, தொண்டூழியம், ரத்த தானம் உள்ளிட்ட அருட்கொடைகளைச் சமுதாயத்திற்கு வழங்குவதற்கு ஏராளமான இளையர்கள் முன்வர வேண்டும். இதுவே தம் விருப்பம்” என்று திரு பெஞ்சமின் சொன்னார்.
விழாக்காலம் என்பது கொண்டாட்டங்கள் மட்டுமே சார்ந்தது அன்று, பிறர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உலகை மாற்ற ஒவ்வொரு நாளும் உறுதியாக முயல்வதுதான் என்றார் அவர். கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார் திரு பெஞ்சமின்.

