அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பின் தாக்கம் சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் தென்படுவதாக அந்தத் துறையைச் சேர்ந்தோர் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, மருந்தியல் பொருள்களையும் மின்னணு நுண்சில்லுகளையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வரும் சிங்கப்பூர், வரிவிதிப்புகளால் இதர நாடுகளைப் போலவே பாதிக்கப்படும் என்று சிங்கப்பூர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் லென்னன் டான் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூருக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 10 விழுக்காட்டு வரி மிதமானதாகத் தோன்றினாலும், பகுதி மின்கடத்திகள், மருந்தியல் பொருள்கள், துல்லிய பொறியியல் சார்ந்த வாகன உதிரிபாகங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வோருக்கு விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
“இது தவிர அலுமினியம் மற்றும் எஃகு பொருள்களின் மீது விதிக்கப்பட்டு உள்ள 25 விழுக்காட்டு வரி இங்குள்ள சிறிய வர்த்தகக் குழுவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
“உலகளவில் உற்பத்தியாளர்களுக்குத் தேவைப்படும் முக்கியமான உதிரிபாகங்களை அந்தக் குழு ஏற்றுமதி செய்கிறது. புதிய வரியால் அந்தப் பொருள்களின் விலை உயர்ந்தால் விற்பனை பாதிக்கப்படுவதோடு அந்தத் தொழிலுக்கும் அது மோசமான விளைவை ஏற்படுத்தும்,” என்றார் திரு டான்.