அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சிங்கப்பூர் உட்பட அனைத்துலக நாடுகளின் இறக்குமதிகளுக்கு 10 விழுக்காட்டு வரியை அமல்படுத்தியதை அடுத்து ஆசியப் பங்குச் சந்தைகள் படுவீழ்ச்சி கண்டன.
சீனா, ஜப்பான், தென்கொரியாவைப்போல் சிங்கப்பூருக்குக் கடுமையான வரிகள் விதிக்கப்படாவிட்டாலும் உலகளாவிய நிலையில் வர்த்தகம் மெதுவடைந்து பொருள்களுக்கான தேவை குறைந்தால் அதனால் சிங்கப்பூரின் ஏற்றுமதிகளும் வளர்ச்சியும் பாதிக்கப்படக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சீன இறக்குமதிகளுக்கு 54 விழுக்காட்டு வரி விதித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய இறக்குமதிகளுக்கு முறையே 24 விழுக்காடும் 25 விழுக்காடும் வரி விதித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் பகுதி மின்கடத்திகளுக்கும் மருந்துப் பொருள்களுக்கும் 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் நீண்டகாலமாக நிலவுவதால் அவை பின்னர் அறிவிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமோ அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையோ அண்மைய 10 விழுக்காட்டு வரியிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை என்பதை அவர்கள் சுட்டினர். இருப்பினும் ஆசியாவின் மற்ற நாடுகளைப்போல பதிலடி வரிவிதிப்புகளிலிருந்து அவை சிங்கப்பூரைப் பாதுகாத்துள்ளன என்று அவர்கள் கூறினர்.
திடீரென்று குறிப்பிடத்தக்க அளவில் பொருள், சேவைகளின் விலை குறைவதும் அதனால் உற்பத்தியும் ஊதியமும் குறைவதுடன் வர்த்தகங்களுக்கும் பயனாளர்களுக்கும் தேவை குறைவதும் பணவாட்டம் (deflation) எனப்படும்.
சிங்கப்பூர் அத்தகைய பணவாட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலியாக சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) முற்பகல் 11.12 மணிக்கு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 0.14 விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒப்புநோக்க, ஜப்பானில் நிக்கேய் குறியீடு 2.62 விழுக்காடும் ஹாங்காங்கின் ஹங்செங் குறியீடு 1.37 விழுக்காடும் மலேசியாவின் புர்சா மலேசியா 0.32 விழுக்காடும் சரிந்தன.
யூரோ, ஜப்பானிய யென் ஆகியவற்றுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சிகண்ட நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 0.35 விழுக்காடு உயர்ந்தது (நண்பகல் நிலவரம்).
அமெரிக்க வரி விதிப்புக்கு சிங்கப்பூரின் பதில் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினர்.
தேவை ஏற்படின் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் உறுதிகூறியுள்ளது. சிங்கப்பூரின் அந்நியச் செலாவணியும் நாணயச் சந்தையும் தொடர்ந்து ஒழுங்குமுறையோடு செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.