மாதாந்தர செலவுகளைக் கேட்டுப்பெற ‘டிரஸ்ட்’ மின்னிலக்க வங்கியின் ‘ஏஐ’ செயலி

மாதாந்தர செலவுகளைக் கேட்டுப்பெற ‘டிரஸ்ட்’ மின்னிலக்க வங்கியின் ‘ஏஐ’ செயலி

2 mins read
d09428db-039b-4479-8b5d-1e7560754acb
மின்னிலக்க முறையில் இயங்கும் டிரஸ்ட் வங்கி ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு அதன் செயலியை வடிவமைத்துள்ளது. - படம்: டிரஸ்ட் வங்கி

மின்னிலக்க முறையில் இயங்கும் ‘டிரஸ்ட்’ வங்கி, மாதாந்தரச் செலவினங்களைக் கேட்டுப்பெற வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் ‘சாட்போட்’ (chatbot) வசதியுடன் கைப்பேசிச் செயலி ஒன்றை வடிவமைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ளது.

‘டிரஸ்ட் ஏஐ ஆஸ்க்’ என்று அச்செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. செய்யப்பட்ட செலவினங்களுக்கு மட்டும் தற்போது உதவும் செயலியை மேலும் பல விவரங்களை வழங்கும் வகையில் விரிவாக்க வங்கி திட்டமிட்டுள்ளது.

உணவகங்கள், ஆரோக்கிய நடவடிக்கைகள், வெளிநாட்டுப் பயணங்களில் மேற்கொண்ட பற்பல செலவுகள் போன்றவற்றை இனி கைப்பேசியில் உரையாடியபடி தெரிந்துகொள்ளலாம். இதுவரை இவைபோன்றவற்றை மாற்று வழிகளில் இணையம் அல்லது ஆவணங்கள் வழியாக வங்கிகளிடம் நேரம் செலவிட்டுப் பெறவேண்டியிருந்தது.

புதிய செயலியில் வாடிக்கையாளர்கள் வழக்கமாகப் பேசி உரையாடி, கேள்விகளைக் கேட்கலாம். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செயலி தேவையான பதில்களை வழங்கும்.

டிரஸ்ட் மின்னிலக்க வங்கி, ‘ஸ்டேன்டர்ட் சார்டட்’ வங்கியும் ‘ஃபேர்பிரைஸ்’ குழுமமும் ஒன்றிணைந்து 2022 செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட அமைப்பாகும். இன்று ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மேல் அதில் உள்ளனர். சிங்கப்பூரின் நான்காவது பெரிய சில்லறை வங்கியாக அது வளர்ந்துள்ளது.

டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் ஏஐ தொழில்நுட்ப மாற்றங்கள்

வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் இவைபோன்ற செயல்பாடுகளை டிபிஎஸ் வங்கியும் ஓசிபிசி வங்கியும் இவ்வாண்டு மேற்கொள்ளத் திட்டமிடுகின்றன.

நவம்பர் மாதத்துக்குள் ஏஐ தொழில்நுட்பத்தைக்கொண்டு டிபிஎஸ் வங்கி அதன் ‘டிஜிபோட்’ செயலியை மேம்படுத்தவுள்ளது. வங்கியின் சில்லறை வாடிக்கையாளர்கள் விரைவில் அவர்களது வங்கி அட்டைகளின் பரிவர்த்தனைகளைத் தடுக்கவோ, புதிய அட்டைகளைப் பெறவோ செயலியைப் பயன்படுத்தலாம்.

ஓசிபிசி வங்கி ஜூலை மாதம் முதல் அதன் ‘வோவ்’ (WoW) ஏஐ தொழில்நுட்பச் செயலியைக் கொண்டு அதன் ஊழியர்களின் நிழல் உருவங்களை வடிவமைத்து நிதி நிர்வாகச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. அதிலும் வாடிக்கையாளர்கள் உரையாடி சேவைகளைப் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்
மின்னிலக்கம்வங்கிடிபிஎஸ்ஓசிபிசிஇணையம்வாடிக்கையாளர்இணையச் சேவைசேவைகைப்பேசிசெயலி