தகவல்கள் மலிந்த யுகத்தில் ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை மிக அவசியம்: அமைச்சர் சியாவ்

பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு

தகவல்கள் மலிந்த யுகத்தில் ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை மிக அவசியம்: அமைச்சர் சியாவ்

1 of 2
படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

02 Oct 2026 - 4:56 pm

3 mins read

தகவல்கள் மலிந்துவிட்ட இன்றைய மின்னிலக்க யுகத்தில், ஒரு நல்ல வர்த்தகச் செய்தி ஊடகத்தின் உண்மையான மதிப்பு அதன் நம்பகத்தன்மை, சரியான மதிப்பீடு, விரிவான கண்ணோட்டம் ஆகியவற்றில் அடங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் கூறியுள்ளார்.

மரினா பே சேண்ட்ஸில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற பிஸ்னஸ் டைம்ஸ் (பிடி) நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ்.
பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

வதந்திகளும் செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்களும் வேகமாகப் பரவும் காலத்தில், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் தேவை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் சியாவ் குறிப்பிட்டார்.

“செய்தியை விரைந்து வெளியிடுவது மட்டுமே முக்கியமன்று. தகவல்களின் நம்பகத்தன்மையும் ஆழமான பார்வையுமே மிக முக்கியம்,” என்றார் அவர்.

தவறான தகவல்கள் முதலீட்டாளர்களின் முடிவுகளையும் நிறுவனங்களின் திட்டங்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், எவை முக்கியமான உண்மைகள் என்பதைத் தீர்மானிக்கும் மதிப்பீட்டு ஆற்றல் ஊடகங்களுக்கு அவசியமாகிறது என்று திரு சியாவ் குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தகக் கொள்கை மாற்றம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி போன்றவை விநியோகத் தொடரிலும் தொழில்களிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்கிப் புரிந்துகொள்ள ஊடகங்களின் மதிப்பீடு உதவுகிறது என்றார் அவர்.

லண்டனின் ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’, நியூயார்க்கின் ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’, தோக்கியோவின் ‘நிக்கே’ போல, சிங்கப்பூரிலிருந்தும் தென்கிழக்காசியாவிலிருந்தும் உலக நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வட்டாரக் கோணத்தை ‘பிடி’ வழங்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

‘பிடி’ நாளேடு 1976 அக்டோபர் 1ல் தொடங்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அடுத்த அரை நூற்றாண்டில் தென்கிழக்காசியாவை உலகம் புரிந்துகொள்ள உதவும் முக்கிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், எஸ்பிஎச் மீடியா அறநிறுவனத்தின் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் திரு கோ பூன் வானுக்கு அவர் நன்றி தெரிவித்தார். திரு கோ பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, திரு சான் யெங் கிட் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் முக்கிய நிகழ்ச்சி இதுவாகும்.

(இடமிருந்து) ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் தலைமை ஆசிரியர் வோங் வெய் கோங், எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோ பூன் வான், போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ்,  எஸ்பிஎச் நிர்வாகத் தலைவர் சான் யெங் கிட், நிர்வாக இயக்குநர் குவெக் யு சுவாங்,   பிஸ்னஸ் டைம்ஸ் ஆசிரியர் சென் ஹுய்ஃபென்.
(இடமிருந்து) ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் தலைமை ஆசிரியர் வோங் வெய் கோங், எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோ பூன் வான், போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், எஸ்பிஎச் நிர்வாகத் தலைவர் சான் யெங் கிட், நிர்வாக இயக்குநர் குவெக் யு சுவாங், பிஸ்னஸ் டைம்ஸ் ஆசிரியர் சென் ஹுய்ஃபென். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

‘பிடி’யின் 50வது ஆண்டைக் கொண்டாடிய இவ்விழாவில் தேசிய ஆய்வு அறநிறுவனத் தலைவர் ஹெங் சுவீ கியட், பெருநிறுவனத் தலைவர்கள், வர்த்தக வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘பிடி’ ஆசிரியர் சென் ஹுய்ஃபென், தொடக்கத்தில் வர்த்தக நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்யும் ஏடாக இருந்த இந்நாளேடு, பொருளியல் முதிர்ச்சியடைந்ததும் செய்திகளை விளக்கிப்பேசும் ஊடகமாக மாறியதைச் சுட்டிக்காட்டினார். வாசகர்கள் முடிவெடுக்கவும் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை வழிகாட்டலுக்கும் ‘பிடி’யை இப்போது நாடுகின்றனர் என்றார் அவர்.

“தென்கிழக்காசியாவை மையமாகக் கொண்டு, உலகளாவிய வர்த்தகச் செய்திகளை வட்டாரக் கண்ணோட்டத்தில் வழங்குவதே எங்களின் எதிர்கால இலக்கு,” என்று திருவாட்டி சென் கூறினார்.

மூலதனச் சந்தைகள், செயற்கை நுண்ணறிவு, விநியோகத் தொடர், ஆற்றல் மாற்றம் போன்ற முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து, காணொளி, ஒலிவடிவம், ‘பிடி குளோபல்’, ‘டீகோடிங் ஏஷியா’ போன்ற புதிய மின்னிலக்கத் தளங்கள் மூலம் சேவையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சி மரினா பே சேண்ட்ஸில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்றது.
பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சி மரினா பே சேண்ட்ஸில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்றது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

“அடுத்த 50 ஆண்டுகளில் தென்கிழக்காசியாவின் வர்த்தகச் சூழல் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்திற்கும் அடுத்து என்ன நடக்கும் எனத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விளக்கமளிப்போம்,” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
வர்த்தகம்நிறுவனம்நிதிமரினா பே சேண்ட்ஸ்ஊடகம்செய்திஅமைச்சர்ஆண்டுவிழா