துவாசிலுள்ள கட்டுமானத் தளமொன்றில் உயரத்திலிருந்து விழுந்த எஃகுக் கம்பிகள் தாக்கியதில் படுகாயமடைந்த வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 46 வயது ஆடவர் சீனாவைச் சேர்ந்தவர். தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் மருத்துவமனையில் மாண்டார்.
துவாஸ் நீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானத் தளத்தில் அக்டோபர் 18ஆம் தேதி அதிகாலை 3.05 மணிக்கு அந்த விபத்து நேர்ந்ததாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.
ஒரே வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது வேலையிட மரணச் சம்பவம் இது.
இச்சம்பவம் தொடர்பில் கவனக்குறைவாகச் செயல்பட்டு மரணம் விளைவித்ததாக 35 வயது ஆடவரைக் கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிகாலை 3.15 மணிக்கு விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
கான்கிரீட்டைப் பலப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கனமான எஃகுக் கம்பிகள் உயரத்திலிருந்து விழுந்ததாகக் கழகம் கூறியது.
பாதிக்கப்பட்ட ஊழியர் நினைவற்ற நிலையில் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிக் காலை 10.20 மணியளவில் உயிரிழந்ததாகவும் அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆடவர் டிகேஎஸ் பில்டர்ஸ் நிறுவனத்தின் ஊழியர் என்று மனிதவள அமைச்சு கூறியது.
அந்தக் கட்டுமானத் தளத்தில், பாதுகாப்பு மறுஆய்விற்காக வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
மாண்ட ஊழியரின் குடும்பத்தினருக்கு உதவி வழங்குவதன் தொடர்பில் ஒப்பந்ததாரர்களுடன் கழகம் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டது.