துவாஸ் வேலைத்தளத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான நிறுவனத்திற்கும் அதன் இயக்குநருக்கும் வியாழக்கிழமை (ஜூன் 25) தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஸ்டார்ஸ் எஞ்சினியரிங் என்னும் அந்த நிறுவனத்திற்கு $500,000 அபராதமும் அதன் ஒரே இயக்குநரான சுவா ஸிங் டா, 42, என்பவருக்கு 18 மாதம், ஒரு வாரம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.
சுவா, வேலைத்தளப் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் இருந்தவர்.
ஸ்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவு மேலாளரான லிவின் மோ டுன், 36, என்னும் மியன்மார் நாட்டவருக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உயிரிழந்த சுப்பையனுக்கும் தமக்கும் இடையில் பகிரப்பட்ட தகவல்களை அழித்ததாகச் சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2021 பிப்ரவரி 24ஆம் தேதி துவாஸ் அவென்யூ 11ல் கலவை இயந்திரம் வெடித்ததில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர்.
பங்ளாதேஷைச் சேர்ந்த ஷோகெல் முகம்மது, 23, அனிசுஸாமன் முகம்மது, 29, இந்திய நாட்டவரான சுப்பையா மாரிமுத்து, 38, ஆகியோர் மரணமடைந்தவர்கள்.
தண்டனையை அறிவித்த நிதிபதி டான் ஜென் சே, கலவை இயந்திரம் தொடர்பான விதிமீறல்கள் பலமுறை நிகழ்ந்ததாகவும் அந்த விதிமீறல்களைச் சரிசெய்ய ஸ்டார்ஸ் நிறுவனத்திற்குப் போதுமான கால அவகாசம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அந்த நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில், கலவை இயந்திரம் எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதில் சுவாவுக்கு முழுமையான, தனிப்பட்ட கட்டுப்பாடு இருந்தது. அந்த இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஊழியர்களுக்கு அவர் தவறாகச் சொல்லித் தந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை 21 நாள்கள் நடைபெற்ற பின்னர் ஸ்டார்ஸ் நிறுவனமும் அதன் இயக்குநர் சுவாவும் குற்றமிழைத்ததாக மே 26ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பில் அந்நிறுவனத்தின்மீதும் அதன் இயக்குநர்மீதும் தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

