சிங்கப்பூரில் புதிய சட்ட ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 13ஆம் தேதி, மூத்த வழக்கறிஞர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டஃபர் ஓங் சியு ஜின், 52, தனியார் சட்ட நிறுவனம் ஒன்றின் (Drew & Napier) இயக்குநர் பிளாசம் ஹிங் ஷான் ஷான், 51, இருவரையும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மூத்த வழக்கறிஞர்களாக நியமித்தார்.
திரு ஓங், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் குற்றவியல் பிரிவில் பணியாற்றுகிறார். திருவாட்டி ஹிங், ‘ட்ரூ அண்ட் நேப்பியர்’ சட்ட நிறுவனத்தின் சர்ச்சைக்குத் தீர்வுகாணல், நிறுவன மறுவடிமைப்புப் பணிகள் பிரிவு இயக்குநராக உள்ளார்.
உயர்நிலை வழக்கறிஞர்களின் வாதிடும் திறன், சட்ட அறிவு, தொழில்முறைச் செயல்திறன் போன்றவற்றை அங்கீகரிக்கும் விதமாக மூத்த வழக்கறிஞர்களாக அவர்கள் நியமிக்கப்படுவர்.
அவர்கள் இந்த நியமனத்தைக் குறிக்கும் விதமாகத் தங்கள் பெயர்களின் பின்னால் ‘SC’ என்று குறிப்பிடும் உரிமையைப் பெறுவர்.
சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் 6,348 பேரில் மொத்தம் 100 பேர் மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் இன்னும் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி, தலைமைச் சட்ட அதிகாரி, மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு 2024ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் நியமன விதிகளை மாற்றியமைத்தது.
சிங்கப்பூரின் சட்டத்துறை மேம்பாட்டுக்கு விண்ணப்பதாரரின் தொட்டுணரக்கூடிய வகையிலான பங்களிப்பு, வழக்கறிஞர் பணிக்கான பங்களிப்பு ஆகியவற்றில் தேர்வுக் குழு அதிகக் கவனம் செலுத்தும் என்று தலைமை நீதிபதி மேனன் கூறினார். தேர்வுக் குழு விதிகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு நியமனம் பெற்றுள்ள சிறப்பு திரு ஓங், திருவாட்டி ஹிங் இருவரையும் சாரும்.
கொலை, போதைப்பொருள் கடத்தல், பணமோசடி தொடர்பான வழக்குகளில் திரு ஓங் அரசாங்கத் தரப்பைப் பிரதிநிதித்துள்ளார்.
நோனோய் என்ற சிறுமியைக் கொலை செய்த மாற்றாந்தந்தை மீதான வழக்கு (2007), சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய வழக்கு, எரிபொருள் துறைப் பெருவணிகர் ஓ.கே. லிம் மீதான வழக்கு போன்றவை அவற்றில் அடங்கும்.
வர்த்தகப் பூசல்களுக்குத் தீர்வுகாண்பதுடன் நொடித்துப்போதல் தொடர்பான வழக்குகளைக் கையாளும் திருவாட்டி ஹிங், இப்பிரிவில் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த வழக்கறிஞராக சட்ட ஆய்வுச் சேவை வழங்கும் ‘லெக்ஸாலஜி இன்டெக்ஸ்’ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்றம் உட்படப் பல நடுவர் மன்றங்களில் உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.