செங்காங்கில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் இருவரின் சடலங்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 6) கண்டுபிடிக்கப்பட்டன. மாண்டவர்கள் தந்தையும் மகளும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆடவரின் உடல் படுக்கையறையில் அழுகிய நிலையில் காணப்பட்டது. பெண்ணின் சடலம் வரவேற்பறையின் வெளிக்கதவுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. ஷின் மின் ஊடகம் அதனைத் தெரிவித்தது.
இரு சடலங்களும் செங்காங் ஈஸ்ட் வேயில் உள்ள புளோக் 324டியின் எட்டாம் தளத்தில் இருக்கும் வீட்டில் அக்டோபர் 6ஆம் தேதி பிற்பகல் 1.35க்குக் கண்டுபிடிக்கப்பட்டன. காவல்துறை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) அதுகுறித்துத் தெரிவித்தது.
ஆடவரும் 47 வயதுப் பெண்ணும் மாண்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது. ஆடவரின் வயது என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஊடகம் அங்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. வீட்டுக்கு வெளியே எந்தப் பொருளும் இல்லை.
அதே தளத்தில் குடியிருக்கும் ஒருவர், ஆடவரும் அவரின் மனைவியும் மகளும் 2001ஆம் ஆண்டு அங்குக் குடிவந்ததாகச் சொன்னார். தங்களிடம் அவர்கள் அவ்வளவாகப் பேசுவதில்லை என்றார் அந்த அண்டை வீட்டுக்காரர். மகளுக்கு மனநலப் பிரச்சினை இருந்திருக்கக்கூடும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
தாயார் 2017ல் மாண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தாயாரின் மறைவுக்குப் பிறகு, தந்தையும் மகளும் அவர்கள் வீட்டிலேயேதான் இருப்பார்கள் என்று அண்டை வீட்டுக்காரர் தெரிவித்தார்.
அந்த வீட்டுக்கு நேரே மேல் மாடியில் இருந்த 70 வயது மதிக்கத்தக்க பெண், ஒருசில நாள்களாகவே கடும் நாற்றம் வீசியதாகச் சொன்னார். குப்பையிலிருந்து அந்த நாற்றம் வருவதாய்த் தாம் கருதியதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மாண்ட திருவாட்டி ஸு நாவின் நெருங்கிய உறவினர்களை முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது.