தெம்பனிஸ் அவென்யூ 10இல் பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதைத் தொடர்ந்து இரண்டு பிள்ளைகள் உட்பட ஐவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து செப்டம்பர் 4ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
விபத்தில் சிக்கிய மூவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆறு வயதிலும் ஒன்பது வயதிலும் உள்ள இரண்டு பிள்ளைகள் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் ஒருவர் 60 வயது பெண் ஓட்டுநர், மற்றவர் 32 வயது ஆண் ஓட்டுநர். மற்றவர் 40 வயது ஆண் ஓட்டுநர்.
மருத்துவமனையை நோக்கி கொண்டுசெல்லப்பட்டபோது அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். 60 வயது ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில் தெம்பனிஸ் அவென்யூ 10ல் பாசிர் ரிஸ் டிரைவ் 12ஐ நோக்கிய சாலையின் இரண்டாம் தடத்தில் வெள்ளை நிற கார் செல்வதைக் காண முடிகிறது. அதையடுத்து வலக்கோடித் தடத்தில் சிவப்பு நிற காருடன் அது மோதியிருப்பதைக் காண முடிகிறது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை உயிரைப் பறிக்கும் 78 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதுபோன்ற 70 விபத்துகள் நடந்தன. அதேபோல விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு கூடியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சாலை விபத்துகளில் 72 பேர் மரணமுற்ற நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 79ஆக அதிகரித்துவிட்டது.

