சிங்கப்பூரில் இவ்வார இறுதியில் சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் கிட்டத்தட்ட 110 பூனைகள் அனைத்துலக நடுவர்களின் முன்னிலையில் வலம்வருகின்றன.
உலகின் மிகப்பெரிய பூனை பதிவகமான ‘கேட் ஃபேன்சியர்ஸ் அசோசியேஷன்’ (Cat Fanciers’ Association) அங்கீகாரம் பெற்ற பூனை அழகுப் போட்டி, ஜூன் 27, 28ஆம் தேதிகளன்று இரண்டு நாள்கள் நடைபெறும் ‘ஆசிய பூனை எக்ஸ்போ 2026’ கண்காட்சியின் முக்கியச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
தங்களுக்கே உரிய சதுர வடிவ முக அமைப்பும் நீளமான, அடர்த்தியான வாலையும் கொண்ட மெய்ன் கூன் (Maine Coon) பூனைகளும், தனித்துவமான மூன்று அடுக்கு உரோமங்களையும் உருளை வடிவ உடலமைப்பையும் கொண்ட சைபீரியன் (Siberian) பூனைகளும் அப்போட்டி மேடைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆனால், அந்தப் பளபளப்பான உரோமங்கள், அனைத்துலக வம்சாவளிப் பெருமைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, ‘சிங்கப்பூரா’ எனும் ஒரு குறிப்பிட்ட அரிய பூனை இனத்துக்கான பற்றாக்குறை மட்டும் அங்குத் தெரிவதாகக் கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் காணப்படும் ஒரே ‘சிங்கப்பூரா’ பூனை ஏரியல் சான் என்பவருக்குச் சொந்தம். சான் சமூகப் பூனைகளுடன் விளையாடி அங் மோ கியோவில் வளர்ந்தவர்.
அவர் எப்போதுமே தனக்கெனச் சொந்தமாக ஒரு பூனையை வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தென்கொரிய நடிகர் ஜாங் கியூன் சுக் அவரது ‘சிங்கப்பூரா’ இனப் பூனையுடன் வெளியிட்ட காணொளியைப் பார்த்த பிறகுதான், அவருக்கு அந்த பூனை இனம் பற்றியே தெரியவந்தது.
அவர் அந்த இனத்தைச் சேர்ந்த பூனையை ஜப்பானியர் ஒருவரிடமிருந்து 3,882 வெள்ளிக்கு வாங்கினார். ‘ஸ்டார்’ எனும் பெயர் கொண்ட அந்த ஆண் பூனையின் இரண்டாவது பூனை நிகழ்ச்சி இது.
இருப்பினும், சானுக்குப் பரிசுகள் அல்லது பட்டங்கள் வெல்லவேண்டும் என்ற எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லை.
“அவன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று மட்டும்தான் நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
“இந்தப் பூனை என் வாழ்க்கையில் நுழைந்ததில் இருந்தே எனக்குப் பேரின்பத்தைக் கொடுத்துவருகிறது,” என்றார் அவர்.

