செம்பவாங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு தங்குவிடுதிகள் மூடப்படுவதால் அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய இடத்தைத் தேட நிறுவனங்கள் போராடி வருகின்றன.
அந்த இடத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்படுவதால் இரண்டு தங்குவிடுதிகளும் ஏப்ரலில் மூடப்பட வேண்டும். கோக்ரன் லாட்ஜ் 1, 2 ஆகியவற்றில் மொத்தம் 9,000 ஊழியர்கள் தங்க முடியும். ஏறக்குறைய 390 நிறுவனங்கள் அங்கு தங்களுடைய ஊழியர்களைத் தங்க வைத்துள்ளன.
குடியிருப்புக் கட்டடங்களை எழுப்புவதற்காக இரண்டு தங்குவிடுதிகளையும் இடிக்கும் பணி மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தங்குவிடுதிகளை நடத்தும் வோபிஸ் என்டர்பிரைஸ் கூறுகிறது.
அவர்கள், வைத்துள்ள தங்குவிடுதிகளின் இடத்தில் புதிய செம்பவாங் நார்த் குடியிருப்புப் பேட்டை கட்டப்படவிருக்கிறது.
ஏப்ரல் 30ஆம் தேதி காலக்கெடு நெருங்கி வருவதால் முதலாளிகள் ஊழியர்களுக்கு மாற்று இடத்தைக் கண்டறிவதில் போராடி வருகின்றனர்
பத்தில் மூன்று முதலாளிகள், தங்களால் மாற்று இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
2025 ஜூன் 29 வரையிலான குத்தகை மேலும் நீட்டிக்கப்படாது என்று கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே வோபிசிடம் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
ஆனால், பிப்ரவரி தொடக்கத்தில்தான் தங்குமிடங்கள் மூடப்படுவது குறித்து வோபிஸ் தங்களிடம் தெரிவித்ததாகக் கூறிய மேக்ஸ்கான் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் எஞ்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், கோக்ரன் லாட்ஜ் 2ல் உள்ள 70க்கும் மேற்பட்ட தங்களுடைய ஊழியர்களுக்கு மாற்று இடத்தைக் கண்டுபிடிக்க ஒரு மாதமாக முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“வடக்கில் உள்ள ஐந்து தங்குவிடுதிகளிடம் கேட்டுவிட்டோம். அனைத்தும் ஏற்கெனவே நிரம்பி விட்டதாகக் கூறுகின்றன. இப்போது தொலைவில் உள்ள பொங்கோலில் இடத்தைத் தேடி வருகிறோம். அங்குள்ள இரண்டு தங்குவிடுதிகள், ஊழியர்களுக்குப் படுக்கைகள் இல்லை என்று கூறுகின்றன,” என்றார் அவர்.
கிராஞ்சி லாட்ஜ் 1ல் இடம் கிடைக்கும் நம்பிக்கையில் அவர் வரிசையில் காத்திருக்கிறார். கிராஞ்சி லாட்ஜ்1ஐயும் வோபிஸ் நிறுவனமே நடத்துகிறது.
செம்பவாங் வடக்கு புதிய குடியிருப்புப் பகுதிக்கான திட்டம் அக்டோபர் 2024ல் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைக் (பிடிஓ) கட்டுகிறது.
ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட கொள்ளளவு கொண்ட தங்குமிடங்களில் சராசரி நிரப்புவிகிதம் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 96.7 விழுக்காடாக இருந்தது என்று சிங்கப்பூர் தங்குவிடுதிகள் சங்கம் (DASL), நைட் ஃபிராங்க் சிங்கப்பூர் ஆகியவற்றின் பிப்ரவரி 5ஆம் தேதி அறிக்கை தெரிவிக்கிறது. அத்தகைய தங்குமிடங்களில் 278,133 படுக்கைகள் உள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஊழியர்களுக்கு மாற்று இடங்களைப் பெற்றுள்ளதாக கூறிய ஏழு முதலாளிகளில் மூன்று பேர், தங்கள் நிறுவனத்தின் அலுவலகம், வேலையிடம் அல்லது அலுவலகத்திலிருந்து குறைந்தது 10 கிலோமீட்டர் தொலைவில் புதிய தங்குமிடங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது என்று கூறினர்.
இதனால் ஊழியர்களை அனுப்பி வைக்கும் நேரம், செலவுகள் கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கோக்ரன் லாட்ஜ் 1, 2 ஆகியவற்றை மூடுவது அண்மைய ஆண்டுகளில் மூடப்படும் ஆகப்பெரிய வெளிநாட்டு ஊழியர்களின் தங்கு விடுதிகளாகும்.
கட்டட, கட்டுமான ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர், முன்னதாக தங்குவிடுதிகளின் குத்தகையை ஜூன் 29ஆம் தேதி வரை எட்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கு முன்பு 2024 அக்டோபர் 30ஆம் தேதி அது காலாவதியாக இருந்தது.
மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர், கட்டட, கட்டுமான ஆணையம், குத்தகை மேலும் நீட்டிக்கப்படாது என்று வோபிசிடம் தெரிவித்தபோது அமைச்சிடமும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும் தங்குமிடங்கள் மூடப்படுவது குறித்து முதலாளிகளுக்கு போதுமான அறிவிப்புகள் நடத்துநர்களால் வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
ஊழியர்களுக்கான மாற்று இட ஏற்பாட்டால் பாதிக்கப்பட்ட முதலாளிகளுடன் மனிதவள அமைச்சு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு சிங்கப்பூர் தங்குவிடுதிகள் சங்கத்தை பரிந்துரைப்பதாகவும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்படி (EFMA), முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தங்குமிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனை மீறும் முதலாளிகள் அமலாக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று பேச்சாளர் எச்சரித்தார்.
இதற்கிடையே கோக்ரன் லாட்ஜ் 1, 2ல் வசிக்கும் சில ஊழியர்கள், தங்களுடைய தங்குவிடுதிகள் மூடப்படுவதையும் எங்கு மாற்றுவார்கள் என்பதையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்று கூறினர்.
சாமி என்று மட்டுமே தனது பெயரைக் குறிப்பிட்ட 35 வயதான கட்டுமான ஊழியர் ஒருவர், கோக்ரன் லாட்ஜ் 1 மூடப்படும் என்று தன்னிடம் முதலாளி தெரிவிக்கவில்லை என்றும் தங்குவிடுதியில் உள்ள மற்ற ஊழியர்களிடமிருந்து அது பற்றி கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“என் முதலாளி இன்னும் எங்களுக்கு தங்குமிடத்தைக் கண்டுபிடித்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியாததால் எனக்குக் கவலையாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை ஏப்ரலில்தான் பார்க்க வேண்டும்,” என்றார் சாமி.