வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் பணியில் ஈடுபட்டுள்ள இரு ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை அணுகியவர்களுக்கு வேலை தேடித் தரும் முன்னரே அவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்தன.
அந்த நிறுவனங்களின் உரிமத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 1ஆம் தேதி) மனிதவள அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இது பற்றிக் கூறிய அமைச்சு, குளோபல் ரிக்ரூட்டர்ஸ் (Global Recruiters), எஸ்டிஐ குளோபல் (SDI Global) ஆகிய இரு நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணையில் அவை தங்களை அணுகியவர்களை வேலையில் அமர்த்துவதற்கு முன்னரே அவர்களிடமிருந்து அதற்கான கட்டணத்தை வசூல் செய்ததை அறிந்ததாகக் கூறியது. அதைத் தொடர்ந்து அவ்விரு நிறுவனங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக தெரிவித்தது.
ஐரோப்பாவில் வேலை தேடித் தரும்படி குளோபல் ரிக்ரூட்டர்ஸ் நிறுவனத்தை அணுகிய இருவரிடமிருந்து அவர்களுக்கு வேலை தேடித் தரும் முன்னரே அதற்கான கட்டணத்தை வசூலித்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டதாக அமைச்சு விளக்கியது.
இதேபோன்று எஸ்டிஐ குளேபல் மீது எழுந்த புகாரையும் தான் விசாரித்ததாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு முகவைகள் சட்டத்தின்கீழ், வேலை தேடி வருவோரிடம் அவர்களை வேலையில் அமர்த்து முன் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதி இல்லை. இது வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கும் பொருந்தும்.