தோ பாயோ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கில் உள்ள ஒரு வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
அதில் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணும் ஆணும் மாண்டனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு (ஜூலை 22) நடந்தது.
இதுகுறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
“தோ பாயோ லோராங் 1ல் உள்ள புளோக் 173ல் தீச்சம்பவம் ஏற்பட்டதாகத் தங்களுக்கு 7.30 மணிவாக்கில் தகவல் வந்தது.
“கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது, தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டிற்குள் சென்று தீயை அணைத்தனர்.
“அப்போது இருவர் சுயநினைவு இல்லாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதன்பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது பதிவில் குறிப்பிட்டது.
“சுயநினைவு இல்லாமல் இருந்த இருவரையும் உதவி மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் ஏற்கெனவே இறந்திருந்தது தெரிய வந்தது,” என்று காவல்துறை கூறியது.
தீச்சம்பவம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“இரண்டாம் தளத்தில் உள்ள மூன்று வீடுகள் தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வேறு இடங்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் காய் யின்சோ தெரிவித்தார்.
மாண்டவர்களின் வயது 50களில் அல்லது 60களில் இருக்கும் என்று அக்கம்பக்கத்தினர் கூறினர். அவர்கள் அந்த வீட்டில் ஓராண்டுக்கு மேலாக வசித்து வந்ததாகக் கூறப்பட்டது.
தீச்சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.