விரைவுச்சாலை விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்

1 mins read
2596f317-5b9e-43f7-ac6d-9084776e2e62
காயமுற்ற இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். - காணொளிப் படம்: ஃபார்எவெர்போலே / டிக்டாக்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (ஏஒய்இ) நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமுற்றனர். சிறுவர்களில் ஒருவரின் வயது ஒன்று. மற்றவருக்கு நான்கு வயது. காயமடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

மரினா கோஸ்ட்டல் விரைவுச்சாலை நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குச் சற்று முன்னர், விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் ஒரு லாரியும் மூன்று கார்களும் சம்பந்தப்பட்டிருந்தன.

சிறுவர்கள் இருவரையும் காரை ஓட்டிச்சென்ற 41 வயது ஆடவரையும் அவருடன் இருந்த 44 வயதுப் பெண் பயணியையும் சுயநினைவுடன் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அந்த ஆடவரும் இன்னொரு வாகனத்தை ஓட்டிச்சென்ற 36 வயது ஆடவரும் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்துக்குப் பிறகு டிக்டாக்கில் பதிவிடப்பட்ட காணொளியில், வெள்ளை காருக்குப் பின்னால் முன்புறம் சிதைவுற்ற நிலையில் சிவப்பு கார் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

வெள்ளை காருக்குச் சற்றுத் தள்ளி இன்னொரு கறுப்பு கார் உள்ளது. அதன் முன்புறமும் சேதமுற்ற நிலையில் காணப்படுகிறது. அது லாரியில் மோதியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்