கௌரவ வாள் அங்கீகாரம் பெற்ற இரு இந்தியர்கள்

3 mins read
eeea79ff-3fc8-4529-92f3-1d47801472ab
டேனியல் ஃபெர்னாண்டஸ் (இடது), யோகா கேஷ்னன். - படம்: த. கவி

சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூரில் மிக வலுவான ஆயுதப்படை தேவைப்படுவதற்கான நினைவூட்டலாக உலகில் நிகழும் பதற்ற நிலைகள் உள்ளன என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்துள்ளார்.

“அண்மையில் நிகழ்ந்த உலகளாவிய நிகழ்வுகள் சிலவற்றில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, ஸ்டார்லிங்க் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களால் இன்றைய போர்க்களம் வெகுவாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில், இணையத் தாக்குதல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆயுதப் படைக்குத் தேவையான நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் வேண்டும்,” என்று அமைச்சர் ஹெங் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் 28வது மூத்த ராணுவ வல்லுநர் நியமன விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு ஹெங் இவ்வாறு கூறினார்.

“ராணுவத்துறை வல்லுநர்கள் திட்டம் மூலம் சவால்மிக்க, தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் சிங்கப்பூர் ஆயுதப்படை சிறந்த நிலையில் இருக்க முடிகிறது. சிங்கப்பூர் ஆயுதப்படை தொடர்ந்து ஆற்றல் மிகுந்த நிபுணர்களை ஈர்க்க வேண்டும். அவர்கள் பணியிடைக்காலத்தில் வாழ்க்கைத்தொழிலை மாற்றிக்கொள்பவர்களாகவும் இருக்கலாம்,” என்றார் அவர்.

“மூத்த ராணுவ வல்லுநர்கள் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் செதுக்கும் இன்றைய தலைவர்களாகவும் புத்தாக்கத் திறனாளர்களாகவும் விளங்குகின்றனர். அவர்களின் பணி, போர்த்திறன்களைக் கூர்மையாக்குவதிலும், நாளைய மிரட்டல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள நம் நாடு தொழில்நுட்ப அடிப்படையில் தயார்நிலையில் இருப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தெமாசெக் கிளப் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) மாலை இடம்பெற்ற விழாவில் மொத்தம் 145 பேர் மூத்த ராணுவ வல்லுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

யோகா கேஷ்னன், 24, டேனியல் ஃபெர்னாண்டஸ், 26 ஆகியோர் கௌரவ வாள் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்களில் இரு இந்தியர்கள் ஆவர்.

நாட்டுக்குச் சேவையாற்றுவதில் ஆர்வம்

சிங்கப்பூரில் பிறந்த பிறகு பெற்றோர்களின் பணி நிமித்தம் காரணமாக பல நாடுகளில் வாழ்ந்து வந்தார் யோகா கேஷ்னன். இருந்தாலும், சிங்கப்பூர் மீதான பற்று அவரது பணியில் தெளிவாக வெளிப்படுகிறது.

அமைச்சரிடமிருந்து கெளரவ வாள் பெறும் யோகா கேஷ்னன்.
அமைச்சரிடமிருந்து கெளரவ வாள் பெறும் யோகா கேஷ்னன். - படம்: த. கவி

தற்போது தற்காப்புத் தொழில்துறை, கட்டமைப்பில் தளபத்தியம், கட்டுப்பாடு, தொடர்பு, கணினி வல்லுநராகப் பணியாற்றி வரும் யோகா கேஷ்னன், கணினி அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

சிங்கப்பூர் பாதுகாப்புக்குப் பங்களிப்பதும், கணினி அறிவியல் மீதான தனது வேட்கையையும் ஒன்று சேர்த்து தான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாக யோகா கேஷ்னன் சொன்னார்.

தந்தையைப் பார்த்து தனக்கு கணினி அறிவியலில் ஆர்வம் வரத் தொடங்கியதாகப் பகிர்ந்துகொண்ட இவர், சிங்கப்பூரின் மின்னிலக்கத் தற்காப்புக்கு அதிகளவில் பங்காற்றி வருகிறார்.

“அன்றாடம் சிங்கப்பூரின் மின்னிலக்கக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். நான் செய்யும் பணி காரணமாக சிங்கப்பூரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது பணியில் நான் மேலும் சிறப்புடன் செயல்பட ஊக்கமளிப்பதாக உள்ளது,” என்றார் யோகா கேஷ்னன்.

இளம் தலைமுறையினர் அன்றாடம் புதிய சவால்களில் ஈடுபடும் ஒரு பணியில் இருக்க விரும்பினால் ராணுவம் அதற்கு சிறந்த தளம் என யோகா கேஷ்னன் நம்புகிறார்.

கௌரவ வாள் பெற்றதில் பெருமிதம் கொள்ளும் இவர், தனது கடின உழைப்புக்கு அதனை ஓர் அங்கீகாரமாகக் கருதுகிறார்.

“வேறு நாடுகளில் வளர்ந்தபோதும் எனக்கு சிங்கப்பூர்மீது பற்று எப்போதும் இருந்து வந்தது. என் குடும்ப உறுப்பினர்கள் பலர் இங்குதான் உள்ளனர். சிங்கப்பூர்தான் என் வீடு. வசதி குறைந்த சிறுவர்களுக்கு உதவும் வகையில் நான் அவர்களுக்கு நிரலிடுதல் திறன்களையும் கற்றுத் தருகிறேன்,” என்று கூறினார் யோகா கேஷ்னன்.

தந்தை வழியில் தனயன்

முதன்முறையாக போர் விமானங்களைக் கண்ட காட்சி இன்னும் டேனியல் ஃபெர்னாண்டஸ் மனத்தில் பசுமரத்தாணிபோல பதிந்துள்ளது.

அமைச்சரிடமிருந்து கெளரவ வாள் பெறும் டேனியல் ஃபெர்னாண்டஸ்.
அமைச்சரிடமிருந்து கெளரவ வாள் பெறும் டேனியல் ஃபெர்னாண்டஸ். - படம்: த. கவி

ஆகாயப்படைப் பொறியாளராக இருக்கும் இவர், தேசிய சேவை புரிந்தபோது காலாட்படையில் பெற்ற அனுபவங்களைக்கொண்டு தமது குழுவைத் திறம்பட வழிநடத்தும் திறமையைக் கற்றுக்கொண்டார்.

தந்தை முன்பு 43 ஆண்டுகளாக ஆகாயப்படையில் சேவை புரிந்ததைக் குறிப்பிட்ட டேனியல், அவரைப் பார்த்து வளர்ந்ததால் ஒருநாள் தானும் ஆகாயப்படையில் சேர வேண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டதாகக் கூறினார்.

பணி நிமித்தம் தந்தை அமெரிக்கா சென்றபோது அவருடன் சென்றிருந்த டேனியல், அங்கு போர் விமானங்களைக் கண்டு மெய்மறந்து போனதாகவும் நினைவுகூர்ந்தார்.

“உற்சாகம் மிகுந்த ஒரு பணி வேண்டுமானால் இளையர்கள் கண்டிப்பாக ஆகாயப்படையில் சேர வேண்டும். கௌரவ வாள் கிடைத்ததை நான் பலருக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் என் தற்போதைய பணியில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற ஊக்கம் பிறந்துள்ளது,” என்றார் டேனியல்.

F-15 போர் விமானத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அதிகாரியாக இருக்கும் இவர், அதன் இயந்திரங்களைப் பாதுகாக்கும் தமது பணியைப் பெருமையாகக் கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்