‘பொன்ஸி’ முதலீடு: பாதிக்கப்பட்டவருக்கு $6.2 மில்லியன் வழங்குமாறு சிங்கப்பூர் தம்பதிக்கு உத்தரவு

2 mins read
ce2c5f00-7658-40e8-9b2e-11f5520acb15
திரு வான் ஹோ கீட் (இடது), அவரின் மனைவி சேலி ஹோ, ‘‌ஷுவர்வின்4யு’ திட்டத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான பீட்டர் ஓங். 2018ஆம் ஆண்டு மக்காவில் இடம்பெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம். - படம்: நீதிமன்ற ஆவணங்கள்

‘பொன்ஸி’ என்றழைக்கப்படும் முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவரிடம் 36.6 மில்லியன் ஹாங்காங் டாலர் (6.2 மில்லியன் வெள்ளி) தொகையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரர்களான கென் என்றழைக்கப்படும் வான் ஹோ கீட், அவரின் மனைவி சேலி ஹோ இருவர் மீதும் ஹாங்காங்கைச் சேர்ந்த திருவாட்டி சான் பிக் சுன் எனும் மாது வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தொடரப்பட்ட அத்தம்பதி சூதாட்டக் கூடங்களுக்கு எதிராக சூதாடி அதன் மூலம் நிச்சயமாக நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் கொடுத்த தவறான நம்பிக்கைக்கு ஈர்க்கப்பட்டு தான் முதலீடு செய்ததாக திருவாட்டி சான் கூறினார்.

அந்த வழக்கு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து இம்மாதம் கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) திருவாட்டி சான் வழக்கில் வெற்றிபெற்றார்.

நீதிபதிகள் மூன்றில் இருவர் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தனர்.

‘‌ஷுவர்வின்4யு’ என்றழைக்கப்படும் சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தை மலேசியாவைச் சேர்ந்த சகோதரர்களான பீட்டர் ஓங், ஃபிலிப் ஓங் இருவரும் தொடங்கியிருந்தனர். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்திட்டம் வெற்றி பெறவில்லை.

முதலீட்டாளர்கள் தரும் தொகையைக் கொண்டு நிபுணத்துவ சூதாட்டக்காரர்களுக்குப் பணம் தந்து, நிச்சயமாக வெற்றி தேடித் தரும் உத்திகளால் சூதாட்டக் கூட விளையாட்டுகளில் லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையை ‘‌ஷுவர்வின்4யு’ தந்தது. ஆனால் உண்மையில் அதன் மூலம் ஈட்டப்படுவதாகக் கூறப்படும் லாபம் புதிய முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பணமாக இருக்கும்.

அதனால் திட்டத்தில் ஏற்கெனவே முதலீடு செய்தோர் ‘லாபம்’ பார்ப்பதற்குப் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியமாகும்.

வானும் ஹோவும் அத்திட்டத்தில் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேர்ந்தனர். அதன் மூலம் ஏழிலிருந்து 10 மில்லியன் வெள்ளி வரை அவர்கள் சம்பாதித்தனர்.

அதற்குப் பிறகு அத்திட்டம் செயலிழந்து போனது. அவ்விருவரும் கொடுத்த நம்பிக்கையில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ‘‌ஷுவர்வின்4யு’ திட்டத்தில் தான் 6.2 மில்லியன் வெள்ளி முதலீடு செய்ததாக திருவாட்டி சான் தெரிவித்தார்.

வான், ஹோ, பீட்டர் ஓங் மூவரும் ஈடுபட்ட சந்திப்பைக் கொண்ட படங்கள் நாளிதழில் வெளியாயின. அப்படங்களில் அவர்கள் அதிகப் பணத்தை வைத்திருந்தது தெரிந்தது. பீட்டர் ஓங், மக்காவில் காணப்பட்டார் என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று முன்னதாகத் தெரிவித்திருந்தது.

அதையடுத்து திருவாட்டி சான், வான், ஹோ இருவர் மீதும் வழக்கு தொடுத்தார்.

குறிப்புச் சொற்கள்