செல்லப் பிராணி உணவுப் பொட்டலத்திற்குள் மறைத்துவைத்து சிங்கப்பூருக்குப் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக ஆடவர் ஒருவர் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பிடிபட்டார்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசியப் பதிவெண் கொண்ட ஒரு காரைக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டபோது அதனுள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செல்லப் பிராணி உணவு, பானப் பொதிக்குள் 20 பொட்டலங்களில் 1,462 கிராம் ஹெராயினும் 1,442 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
இன்னொரு சம்பவத்தில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி மலேசியப் பதிவெண் கொண்ட ஒரு காரை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, பயணி ஒருவரின் பையில் இரு கறுப்புப் பொட்டலங்களில் போதைப்பொருள்கள் மறைத்து எடுத்துவரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் சோதனையிட்டபோது, 3,272 கிராம் கஞ்சாவும் 1,709 கிராம் ஐஸ் போதைப்பொருளும் அடங்கிய ஏழு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விரு கடத்தல் முயற்சிகள் குறித்தும் ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.
அவற்றின் தொடர்பில் 20 மற்றும் 39 வயதுடைய மலேசிய ஆடவர் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மேல்விசாரணைக்காக அவர்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
15 கிராம் தூய ஹெராயின், 250 கிராம் ‘ஐஸ்’ அல்லது 500 கிராம் கஞ்சா என்ற அளவிற்குமேல் போதைப்பொருள் கடத்திய குற்றம் உறுதிப்படுத்தப்படுவோர் மரண தண்டனையை எதிர்நோக்குவர்.

