நாணயம் மாற்று வணிகரிடம் இருந்து கிட்டத்தட்ட 100,000 வெள்ளி திருடிவிட்டு சிங்கப்பூரைவிட்டு தப்பிக்க முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சாங்கி விமான நிலையத்தில் விமானத்திற்குள் இருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 21ஆம் தேதி ஆடவர்கள் இருவரும் கோல்மன் ஸ்திரீட்டிலுள்ள ஒரு நாணய மாற்று வணிகரிடம் பணத்தை திருடிவிட்டதாகக் காவல்துறைக்கு புகார் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
45 மற்றும் 54 வயது சந்தேக நபர்கள் நாணயம் மாற்று வணிகரிடம் தங்களுக்கு 75,000 அமெரிக்க டாலர் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
வணிகரும் அதற்கு ஏற்பாடு செய்ய, ஏப்ரல் 21ஆம் தேதி சந்தேக நபர்கள் பணத்தை மாற்றுவதுபோல் கடைக்கு வந்தனர். அமெரிக்க டாலரைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, பணத்திற்கு தேவையான சிங்கப்பூர் வெள்ளி எடுத்து வருவதாக ஆடவர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால் ஆடவர்கள் அமெரிக்க டாலர்களைப் பார்வையிடும் போதே நூதனமாக பணத்தை திருடியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு ஆடவர்கள் வராததால் தம்மிடம் இருந்த அமெரிக்க டாலரை சரிபார்த்துள்ளார் வணிகர். அப்போது தான் அவருக்கு புரிந்தது பணம் திருடுபோனது என்று. வணிகர் உடனடியாகக் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபர்களிடம் இருந்து அந்தப் பணத்தைக் காவல்துறை கைப்பற்றியும் உள்ளது.
வெளிநாட்டவரான அவர்கள், ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகருக்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்த போது கைது செய்யப்பட்டனர்.

