சிங்கப்பூரில் காசோலைப் பயன்பாடு படிப்படியாக முடிவுக்குவரும் நிலையில், புதிதாக இரண்டு மின்னியல் கட்டண முறைகள் (EDP, EDP+) அறிமுகம் காணவிருக்கின்றன.
பின்னொரு தேதியில் பணம் செலுத்துவதற்கான அவ்விரு கட்டணமுறைகளையும் அடுத்த ஆண்டு (2025) நடுப்பகுதியில் பயன்படுத்த முடியும் என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் டிசம்பர் 5ஆம் தேதி தெரிவித்தன.
ஏழு வங்கிகளின் மின்னிலக்க வங்கிச் சேவைத் தளங்கள் வாயிலாக அவற்றைப் பயன்படுத்த முடியும். டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, சிட்டிபேங்க், எச்எஸ்பிசி, மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவை அவை.
பணம் செலுத்துபவரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகை எப்போது கழிக்கப்படும் என்பதில் இரு கட்டண முறைகளும் வேறுபடுகின்றன.
‘இடிபி’ முறையில் பணத்தைப் பெறுபவர் பணத்தைக் கோரும்போதுதான் அது பணம் செலுத்தியவரின் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். ஆனால் ‘இடிபி+’ முறையில் உடனடியாகக் கழிக்கப்படும்.
தற்போது பின்தேதியிடப்பட்ட காசோலைகள் மூலம் வழங்கப்படும் தொகைக்கான தேவைகளை ‘இடிபி’ முறை ஈடுகட்டும் என்று ஆணையமும் சங்கமும் கூறின.
‘இடிபி+’ முறை, தற்போதைய காசாளர் காசோலைகளுக்கு (Cashier’s orders) ஈடான சேவையை வழங்கும். பணம் வழங்கலுக்கான கூடுதல் உத்தரவாதத்தை அது தரும்.
சிங்கப்பூரில் இப்போது நடைமுறையில் உள்ள பேநவ், ஃபாஸ்ட், ஜைரோ, எம்இபிஎஸ்+ கட்டணமுறைகளுடன் புதிய கட்டணமுறைகளும் சேவையில் இணையும். அவை பணம் செலுத்துவோர் பேநவ் முறை மூலம் பணம் பெறுவோரை எளிதில் அடையாளம்காண உதவும்.
தொடர்புடைய செய்திகள்
நிறுவனங்களும் அமைப்புகளும் புதிய கட்டண முறைகளைப் பயன்படுத்தப் போதிய அவகாசம் தரும் வகையில், ஆணையமும் சங்கமும் காசோலை முறையை மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளன. அதாவது, 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வரை நிறுவனக் காசோலைகளைப் பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
இருப்பினும், 2025 டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு வங்கிகள் புதிய காசோலைப் புத்தகங்கள் வழங்குவதை நிறுத்தவேண்டும் என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை.
தனிநபர் வங்கிக் கணக்குகளுக்கான காசோலைகள் தொடர்ந்து கிடைக்கும். வாடிக்கையாளர்களில் நிறுவனம், தனிநபர் என இருதரப்புக்குமான காசாளர் காசோலைகளுக்கும் அமெரிக்க டாலர் காசோலைகளுக்கும் இது பொருந்தும்.
60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 2025 டிசம்பர் 31க்குப் பிறகும் காசோலைச் சேவைக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவர். மூத்தோர் மின்னியல் கட்டண முறைக்கு மாறுவதற்குக் கூடுதல் அவகாசம் தரும் நோக்கில் ஏழு வங்கிகளும் இதை நடைமுறைப்படுத்துகின்றன.