உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் இரண்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (எண்டர்பிரைஸ்எஸ்ஜி) அந்த இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
நிறுவனங்களின் நடைமுறைகளை முறைப்படுத்தியும் ஒரே இடத்தில் உணவு தயாரிப்பது வழியாக அவற்றின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதும் திட்டங்களின் நோக்கமாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு, பானத் துறை நிறுவனங்களுக்கு இரண்டு திட்டங்களும் கைகொடுக்கும் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் தெரிவித்தது.
அதன் புதிய உணவு சேவை உற்பத்தித் திறன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
நடைமுறைகளை முறைப்படுத்தி ஆற்றலை அதிகரிப்பது, ஒரே இடத்தில் உணவுகளைத் தயாரிப்பது ஆகியவை உணவு, பானத் துறைக்கு வெற்றி தரும் அம்சங்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டன.
உணவு, பானத்துறையில் அதன் செயல்பாடுகளின் ஆற்றல்களைப் பெருக்கும் முதல் திட்டத்தில் (பிஒபி) மனிதவள ஆற்றல், வருவாய் வளர்ச்சி, வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை நிறுவனங்கள் ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ள உதவும் என்று எண்டர்பிரைஸ்எஸ்ஜி குறிப்பிட்டது.
இதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள நான்கு ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து கடையின் இடத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் உணவுப் பட்டியலை வடிவமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு வழிகாட்டுதலைப் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஃபுட்எக்ஸ் திட்டம், பொருத்தமான உணவு தயாரிப்பு, சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, உணவை ஒரே இடத்தில் தயாரிக்க உணவு, பானத் துறை நிறுவனங்களுக்கு உதவும்.
அதில் ஆரம்பத்தில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டில் ஃபுட்எக்ஸ் முன்னோடித் திட்டத்தில் வெற்றிகரமாக 200 உணவு, பான நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது என்று எண்டர்பிரைஸ்எஸ்ஜி குறிப்பிட்டது.