செங்காங் - பொங்கோல் இலகு ரயில் நிலையத்திற்கான இரு புதிய ரயில்கள் ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அவை தமது சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துறைமுகத்திலிருந்து செங்காங் இலகு ரயில் நிலையப் பராமரிப்புச் சேவை நிலையத்திற்கு அவ்விரு ரயில்களும் கொண்டு வரப்பட்டதாகவும் பின்னர், அவை தண்டவாளத்தில் பொருத்தப்பட்டு, இரு பெட்டிகள் கொண்ட ரயில்களாக உருவாக்கப்பட்டதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (மே 9) வெளியிட்ட காணொளியுடன் கூடிய ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
போக்குவரத்துச் சேவையைத் தொடங்குவதற்கு ஏற்றவாறு இவ்விரு ரயில்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அது மேலும் கூறியது.
இறுதிக்கட்ட சோதனைகளை ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் ஆணையம் சொன்னது.
செங்காங், பொங்கோல் வட்டாரங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தருவிக்கப்படும் 25 புதிய இரு பெட்டிகள் கொண்ட ரயில்களில் இவ்விரு ரயில்களும் அடங்கும்.
இந்த ரயில்களை ஜப்பானின் ‘மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்’ தயாரிக்கிறது.
2022ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட புதிய ரயில்களில் 17 ரயில்கள் 2024ஆம் ஆண்டு தொடங்கி 2027ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக விநியோகிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
2023 ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட மீதமுள்ள எட்டு ரயில்கள் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூர் வந்தடையும்.
‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ வியாழக்கிழமை (மே 9) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், மீதமுள்ள 23 புதிய ரயில்கள் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு படிப்படியாக இயங்கத் தொடங்கும் எனத் தெரிவித்தது.
மேலும், அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போதுள்ள ஒற்றைப் பெட்டி ரயில்களுக்குப் பதிலாகப் புதிய இரு பெட்டி ரயில்கள் படிப்படியாக மாற்றப்படும் என்றும் அது கூறியது.
ஒவ்வொரு புதிய ரயில் பெட்டியிலும் 105 பயணிகள் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.