சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் எஸ்கியூ826 விமானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி விமானச் சிப்பந்திக்குத் தீங்கிழைத்த பயணியும் அவருடன் பயணம் செய்தவரும் அந்த விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் சிங்கப்பூரிலிருந்து பின்னிரவு 1.15 மணிக்குச் சீனாவின் ஷாங்காய் நகருக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.
விமானம் கிளம்பும் நேரத்தில் அது ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த வேளையில், அந்தப் பயணி சிப்பந்தியை நோக்கித் தகாத சொற்களைக் கூறியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
சம்பவம் குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ‘எஸ்ஐஏ’ பேச்சாளர், சம்பந்தப்பட்ட பயணி குறித்த மேல்விவரங்களைத் தர மறுத்துவிட்டார்.
நிலைமையை மதிப்பிட்ட பிறகு மீண்டும் பயணிகள் ஏறும் நுழைவாயிலுக்கே திரும்ப விமானிகள் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. விமானத்திலிருந்த மற்றவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, அந்தப் பயணியையும் அவருடன் பயணம் செய்த மற்றொருவரையும் விமானத்திலிருந்து வெளியேற்ற விமானிகள் முடிவு செய்ததாகப் பேச்சாளர் கூறினார்.
“எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, மரியாதையான வேலைச்சூழலில் பணிபுரிவதற்கான உரிமை இருப்பதாக ‘எஸ்ஐஏ’ நம்புகிறது. அவர்களுக்கு எதிரான முறையற்ற நடத்தையை அது ஒருபோதும் சகித்துக்கொள்ளாது,” என்றார் அவர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானம் 1 மணி 46 நிமிடங்கள் தாமதமாக, பின்னிரவு 3 மணியளவில் மீண்டும் புறப்பட்டதாகக் கூறப்பட்டது.
வாடிக்கையாளர்கள், சிப்பந்திகளின் பாதுகாப்புக்கு முக்கிய முன்னுரிமை தருவதாக ‘எஸ்ஐஏ’ கூறியது. மேலும், இச்சம்பவத்தால் நேர்ந்த சங்கடத்திற்கு அந்த விமானத்திலிருந்த பயணிகளிடம் அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தின் ஒரு பகுதியைக் காட்டும் காணொளி டிக்டாக் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் மாண்டரின் மொழியில் உரத்த குரலில் கத்துவதையும் விமானச் சிப்பந்திகள் அவரை அமைதிப்படுத்த முயல்வதையும் காணமுடிகிறது.
“எங்கள் விமானச் சிப்பந்திகள் விமானத்தினுள் விழிப்புடன் செயல்படப் பயிற்சி பெற்றவர்கள்,” என்று ‘எஸ்ஐஏ’ பேச்சாளர் கூறினார்.
“வாடிக்கையாளர்கள், சிப்பந்திகளின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் நடத்தை கொண்ட பயணிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கையாளும் திறன் அவர்களுக்கு உண்டு,” என்றார் அவர்.
தவறான முறையில் நடந்துகொள்ளும் பயணிகள் விமானத்தினுள் ஏறுவதற்கு நிறுவனத்தின் தரைத்தள ஊழியர்கள் அனுமதி மறுக்கக்கூடும் என்று ‘எஸ்ஐஏ’ கூறியது.

