விசாக தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் இருவர்

விசாக தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் இருவர்

2 mins read
be085701-81e7-4877-bdb5-05bfc8c5bc99
பௌத்த போதனை செயல்களில் நிரூபித்துவரும் மேக்ஸ் சென் (இடம்), ஜெரேமி வோங். - படங்கள்: சிஎன்ஏ

பௌத்த சமயத்தினர் பலருக்கு விசாக தினத்தில் கோயிலுக்குச் செல்வதும் பிரார்த்தனைகளைச் செய்வதும் வழக்கமான நடவடிக்கைகளாகும். ஆனால் இருவர், ரத்த நன்கொடை வழங்கி வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர்.

விளம்பர நிபுணரான 50 வயது ஜெரேமி வோங், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரத்த தானம் செய்து வருகிறார்.

தாராள எண்ணம், அக்கறை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் தன்னலம் என்பதற்குப் பதிலாக பிறர் நலம் என்ற பௌத்த பண்புகளுடன் வாழ்ந்து காட்டுவதற்கு இது ஒரு வழி என்று அவர் கருதுகிறார்.

“ரத்த நன்கொடை வழக்கமாகிவிட்டாலும் அதனைக் கடமைக்காகச் செய்யவில்லை,” என்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) கொண்டாடப்படும் விசாகத் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ‘பிளட்பேங்க்@டோபிகாட்’ நிகழ்ச்சியில் ரத்த நன்கொடை வழங்கிய வோங், சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே பெளத்த சமயத்தைப் பின்பற்றிவரும் வோங், ரத்த நன்கொடைக்கு ரத்த வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கிச் செயல்பட்ட நண்பரின் அழைப்பை ஏற்று தனது 30வது வயதில் இருந்து ரத்த தானம் செய்து வருகிறார்.

அந்தச் சிறிய செயலால் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற உணர்வே அவரைத் தொடர்ந்து ரத்த தானம் செய்ய வைத்து வருகிறது. தற்போது 38வது முறையாக ரத்த தானம் வழங்கியுள்ள அவர் ஆண்டுக்கு நான்கு முறை அதனைச் செய்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு தீவிர பௌத்தராக ‘பிடபிள்யூ’ (BW) மடாலயத்தில் பதின்ம வயதினர் முதல் 80 வயது வரையிலானவர்களுக்கு வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறார்.

அதே போன்று உள்வடிவமைப்பு நிபுணரான மேக்ஸ் சென், 34, ஒரு பௌத்தராக வளர்ந்து வந்ததில் ரத்த தானத்தைப் பிறர்க்குச் செய்யும் ஒரு நன்கொடையாகக் கருதுகிறார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பௌத்த சமயக் குடும்பத்தில் வளர்ந்த அவர், இளம் வயதிலிருந்தே சமய வகுப்புகளில் பங்கேற்று வருகிறார். அவ்வாறு, ஒரு ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற இளையர் வகுப்பில் நண்பர் ஒருவர் அழைப்பை ஏற்று அவர் 18வது வயதிலிருந்து ரத்த தானம் செய்து வருகிறார்.

அந்தச் சமயத்தில் அவரது ‘சோங் ஹுவா டோங் டோ டெக் ஹுவி’ கோயிலும் ரத்த நன்கொடை இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாலும் அங்கிருந்து அவர் ரத்த தானத்தைத் தொடங்கினார்.

பௌத்த போதனைகளில் பணமாகவோ நேரமாகவோ நம்மால் முடிந்த வகையில் எந்த வழியிலாவது சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டுள்ளது என்று சென் கூறுகிறார்.

“நமது உடல்நிலை அனுமதித்தால் ரத்த தானம் வழியாகவும் சமூகத்திற்குப் பங்காற்ற முடியும்,” என்றார் அவர்.

சைவ உணவு பழக்கம் கொண்ட அவர், ஒவ்வொரு தானத்திற்கும் முன்பு போதுமான அளவு ஓய்வெடுத்து, நீர்ச்சத்துகள் குறையாமல் பார்த்துக்கொண்டு, கீரைகளைச் சாப்பிட்டு, இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்து ஆரோக்கியமாக இருக்கிறார்.

இதுவரை, அறுபது முறை ரத்த தானம் செய்துள்ள சென், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதனைத் தவறாமல் செய்து வருகிறார். அதற்காக நாள்காட்டியில் அவர் குறித்தும் வைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்