தனித்தனிச் சம்பவங்களில் தேசியப் பூங்காக் கழகத்தின் காகங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் இரு பெண்கள்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லியன் சிட் சூன், 60 எனும் பெண் மீது நவம்பர் 18, புதன்கிழமை இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புக்கிட் பாஞ்சாங், செஞ்சா ரோடு அருகே கழகம் வைத்திருந்த காகம் பிடிக்கும் கூண்டை அவர் இருமுறை பிரித்துப் போட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், துன்புறுத்தல், தாக்குதல், பொதுமக்களுக்குத் தொல்லை விளைவித்தல், பொறுப்பற்ற செயலால் கடும் காயம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டன.
கடந்த ஆண்டில், ஒருவர்மீது செருப்பையும் கல்லையும் வீசி இடது கையை முறித்ததாகவும், திறன்பேசியைக் ஒன்றைக் கையாடல் செய்ததாகவும், மற்றொருவரைத் தாக்குவதாக மிரட்டியதாகவும் அவர்மீது குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.
தனித்த மற்றொரு வழக்கில், வனவிலங்கு நிர்வாகத் தலைமை இயக்குநரின் (Director General of Wildlife Management) எழுத்துபூர்வ அனுமதியின்றிப் புறாக்களுக்கு உணவளித்ததாகக் கூறப்படும் டான் சோங் ஹோங், 74 என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் வனவிலங்குச் சட்டத்தின்கீழ் ஆறு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார். கழகம் வைத்திருந்த காகக் கூண்டின் வாயிலை மூன்று முறை அட்டைகளால் மூடியதாகவும், பல இடங்களில் ஆறு முறை பறவைகளுக்குச் சட்டவிரோதமாக அவர் உணவளித்ததாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட இவ்விருவரின் வழக்குகளும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
