இவ்வாரம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) சிம்ஸ் அவென்யூவில் ஐந்து கார்களும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் காயமுற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூ சாலையில் அன்றைய தினம் மாலை 6.25 மணியளவில் போக்குவரத்து உச்சத்தில் இருந்த நேரத்தில் அந்த ஏழு வாகனங்கள் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய இரண்டு ஆடவர்கள் சுயநினைவோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் வயது 53, மற்றொருவரின் வயது 55 எனத் தெரிவிக்கப்பட்டது. விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அந்த இருவரையும் ராபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியது.
விபத்து நடந்ததும் அங்கு எடுக்கப்பட்ட காணொளி இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. அதில் வெள்ளிநிறக் கார் சாலையின் இரண்டாம் தடத்தில் அதன் முன்புறம் சேதமடைந்து நிற்பது தெரிகிறது.
அந்த காரின் பக்கத்தில் ஒருவர் அமர்திருப்பதும் அவருக்கு அருகே உடைந்த நிலையில் மோட்டார்சைக்கிளின் பாகம் கிடப்பதும் காணொளியில் பார்க்கமுடிகிறது. அந்த ஆடவருக்கு முன்பாக ஒரு வெள்ளி நிறக்கார் நிற்கிறது.
அந்த வாகனத்துக்கு முன்பாக சாம்பல் நிற வேனும், அதற்கு முன்பாக இருந்த சிவப்பு நிற காருக்கும் இடையே ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கியிருப்பதும் காணொளியில் தெரிந்தது.


