2 நாளில் 132 வாகனங்களிடம் சோதனை நடத்திய போக்குவரத்துக் காவல்துறை

மோட்டார்சைக்கிளை உரிமமின்றி ஓட்டிய இருவர் கைது

1 mins read
fae64cf9-d84f-44b7-bb4e-599da241a30c
உரிமமின்றி மோட்டார்சைக்கிளை ஓட்டிய 21 வயது, 33 வயதுடைய ஆடவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

போக்குவரத்துக் காவல்துறை, விரைவுச்சாலைகளில் மோட்டார்சைக்கிள்களை முறையின்றி ஓட்டுவோரைக் குறிவைத்து இரண்டு நாள் நடத்திய சோதனைகளில் ஆடவர்கள் இருவர் பிடிபட்டுள்ளனர்.

இம்மாதம் (டிசம்பர் 2025) 15, 16ஆம் தேதிகளில் 132 வாகனங்களைப் போக்குவரத்துக் காவல்துறையினர் சோதித்தனர். போக்குவரத்துக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

முறையான உரிமமும் காப்புறுதியும் இல்லாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிய 21 வயது, 33 வயதுடைய ஆடவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

வேக வரம்பை மீறிச் சென்றது, பழுதடைந்த வாகனங்களுக்கான சாலையோரத் தடத்தில் வாகனத்தை ஓட்டியது, அதே தடத்தில் வாகனத்தை நிறுத்தியது, அங்கீகரிக்கப்படாத தலைக்கவசங்களை அணிந்து வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக இரண்டு நாளில் 154 அழைப்பாணைகள் கொடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

உரிமமின்றி வாகனம் ஓட்டிய குற்றத்தைப் புரிவோருக்கு $10,000 வரை அபராதமோ அதிகபட்சம் மூவாண்டுச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும். மீண்டும் மீண்டும் அத்தகைய குற்றத்தைப் புரிவோருக்கு $20,000 வரை அபராதமோ அதிகபட்சம் ஆறாண்டுச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும். வாகனமும் பறிமுதல் செய்யப்படக்கூடும்.  

காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுவோருக்கு $1,000 வரை அபராதமோ அதிகபட்சம் மூன்று மாதச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும். எல்லா வகையான வாகனங்களை ஓட்டுவதற்கும் அவர்களுக்குத் தடை விதிக்கப்படும். 

குறிப்புச் சொற்கள்