சிலேத்தார் விரைவுச்சாலையில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக மரம் விழுந்ததால் காயமுற்ற வாகன ஓட்டிகள் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவ்விபத்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) நேர்ந்தது.
மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் லென்டோர் அவென்யூ வெளிவழிக்கு அருகே நேர்ந்த அவ்விபத்து குறித்து இரவு 10.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்தில் காயமடைந்த இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அது கூறியது.
மழை பெய்துகொண்டிருந்த வேளையில், சாலையின் வலது ஓரத் தடத்தில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் சென்றுகொண்டிருந்ததை கார் ஒன்றின் முன்பக்கப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டியது.
அப்போது, சாலையைப் பிரிக்கும் நடுப்பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென விழுந்தது. அது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர்மீது விழுந்ததுபோல் தெரிந்தது.
அதனால், சாலைப் பிரிப்பான்மீது அவர் மோத நேர்ந்தது. இருப்பினும், மோட்டார்சைக்கிளை அவர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.
ஆயினும், விழுந்த மரத்தின்மீது இன்னொரு மோட்டார்சைக்கிள் மோதியதில் அதனை ஓட்டிச் சென்றவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். அவர் ஒருபக்கமாக விழ, மோட்டார்சைக்கிள் தீப்பொறி பறக்க சறுக்கிச் சென்றது.
தொடர்புடைய செய்திகள்
அதே நாள் இரவு, கிட்டத்தட்ட அதே நேரத்தில், ஜாலான் புசாரில் மரத்தின் பெருங்கிளை ஒன்று முறிந்து விழுந்தது என்றும் கிட்டத்தட்ட சைக்கிளோட்டிகள் பலர்மீது விழவிருந்தது என்றும் ஷின் மின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

