மே 19 அன்று மைக்கேல் ஹான் எழுதிய ‘சிங்கப்பூரைக் கட்டிய முன்னோடிகளை நினைவில் கொள்வது’ என்ற கட்டுரையை நான் மேற்கோள் காட்டுகிறேன். சிங்கப்பூரின் ஆரம்பகால துறைமுக நடவடிக்கைகளை வடிவமைக்க உதவிய இரண்டு குறிப்பிடத்தக்க ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத முன்னோடிகளை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். அவர்கள்தான் திரு பி. கோவிந்தசாமி செட்டியார் மற்றும் திரு எஸ்.எல். பெருமாள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் டெங் சியூ ஙோ அந்நாளிதழின் வாசகர் பக்கத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில் திரு டெங், சிங்கப்பூர்த் துறைமுக செயல்பாடுகளை வடிவமைக்க உதவிய பல முன்னோடிகளில் திரு பி கோவிந்தசாமி செட்டியாரும் திரு எஸ். எல். பெருமாளும் அடங்குவர்.
1930ஆம் ஆண்டு கோட்டை கோவிந்தசாமி செட்டியார் என்றும் அழைக்கப்பட்ட திரு கோவிந்தசாமி செட்டியார் திரு முகமது யூசுஃபுடன் இணைந்து இந்திய மாலுமிகள், துறைமுக ஊழியர்கள் உள்ளிட்டோரைப் பணியமர்த்தும் இந்திய ஊழியர் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்.
சிங்கப்பூர் துறைமுக வாரியத்தின் ஆகப் பெரிய குத்தகைத்தாரரான அவருடைய நிறுவனம், துறைமுக வாயில் ஒன்றிலும் இரண்டிலும் செயல்பட்டது.
வர்த்தகத்தைத் தாண்டி திரு கோவிந்தசாமி சமூகநலனில் அதிக அக்கறை கொண்டவராக இருந்தார். அவர் தனது கொட்டகையில் இலவச உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கி, தேவையுள்ள அனைத்து இனத்தவருக்கும் உதவினார் என்று குறிப்பிடிருந்தார்.
“1937ஆம் ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டல்மண்ட்ஸ் அரசு, திரு கோவிந்தசாமியை அமைதித் தூதராக நியமித்தது. திரு கோவிந்தசாமியின் வர்த்தகம், நேர்மை, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய போக்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வண்ணம் அரிய நற்சான்றிதழ் ஒன்றை அரசாங்கம் அவருக்கு வழங்கியது.
“திரு கோவிந்தசாமியின் சகோதரி மகனும், மருமகனுமான திரு எஸ். எல். பெருமாள், ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது துறைமுக செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டார்.
“ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைக்க மறுத்த திரு பெருமாள் தமது பணியில் கவனம் செலுத்தினார். அதேவேளை, திரு கோவிந்தசாமி ரகசியமாக அரிசியை விநியோகம் செய்ததோடு பிரிட்டிஷ் தரப்புக்கு உதவ ரகசியத் தகவல்களையும் கொடுத்தார். அந்த இருவரின் அமைதியான துணிச்சல் எண்ணற்ற குடும்பங்கள் வாழ உதவியது.
தொடர்புடைய செய்திகள்
“1945ஆம் ஆண்டு போருக்குப் பின் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் திரு கோவிந்தசாமியை அவர் வீட்டில் சந்தித்து துறைமுக செயல்பாடுகளைச் சீரமைப்பது பற்றி கலந்துரையாடினார்,” என்று திரு டேங் தமது கடிதத்தில் எழுதியிருந்தார்.
திரு கோவிந்தசாமி மாரடமைப்பால் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தபோது, 3,500க்கும் அதிகமானோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த திரண்டதால் துறைமுகம் கிட்டத்தட்ட அரை நாள் மூடப்பட்டது.
அறநிறுவனங்களுக்கும் கோவில்களுக்கும் தாராளமான நன்கொடை வழங்கியது திரு கோவிந்தசாமியின் நற்செயல்களில் அடங்கும்.
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலராக இருந்துகொண்டே திரு கோவிந்தசாமி ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தையும் பார்த்துக்கொண்டார். ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தைத் திரு பெருமாள் பின் சொந்த செலவில் மறுநிர்மாணம் செய்தார்.
சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் தருணத்தில் திரு கோவிந்தசாமி, திரு பெருமாள் ஆகிய இரண்டு இந்திய முன்னோடிகள் தேசத்தின் கதைகளில் இணைக்கப்பட வேண்டும் என்று திரு டேங் வலியுறுத்தினார்.