தமிழ் முரசுடன் இணையும் மேலும் இரு கல்விமான்கள்

தமிழ் முரசுடன் இணையும் மேலும் இரு கல்விமான்கள்

2 mins read
22118e98-8f81-460e-8e2a-11825617ad92
எஸ்பிஎச் மீடியா வழங்கும் செய்தித்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள சிவாணி சக்திவேல், 19 (இடது), தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து எஸ்பிஎச் மீடியா வழங்கும் தமிழ் ஊடகத்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள வெங்கடேசன் வித்யா லட்சுமி, 19. - படம்: சுந்தர நடராஜ்

தரமான இதழியலை ஊக்குவிக்கவும் வளர்ந்துவரும் இளம் திறனாளர்களை ஊடகத்துறைக்கு ஈர்க்கவும் இரண்டு கல்விமான்கள் தமிழ் முரசுடன் இணைகின்றனர்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து எஸ்பிஎச் மீடியா வழங்கும் தமிழ் ஊடகத்துறை உபகாரச் சம்பளத்தை வெங்கடேசன் வித்யா லட்சுமி, 19, பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயிர்மருத்துவப் பொறியியல் இளநிலைப் பட்டப்படிப்பு பயிலவிருக்கும் வித்யா, சென்ற ஆண்டு அறிமுகம் கண்ட இந்த உபகாரச் சம்பளத்தைப் பெறும் முதல் கல்விமானாக விளங்குகிறார்.

எஸ்பிஎச் மீடியா வழங்கும் செய்தித்துறை உபகாரச் சம்பளத்தை சிவாணி சக்திவேல், 19, பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தில் தகவல் முறைகள் (Information Systems) துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளவிருக்கும் சிவாணி, செய்தித்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்று தமிழ் முரசு செய்தியறையோடு இணையும் மூன்றாவது கல்விமானாக விளங்குகிறார்.

வியாழக்கிழமை (ஜூலை 30) மாலை நடைபெற்ற எஸ்பிஎச் மீடியா உபகாரச் சம்பளம் வழங்கும் விழாவில் இருவரும் தங்களுக்‌கான உபகாரச் சம்பளங்களைப் பெற்றுக்கொண்டனர்.

நான்காண்டு பட்டக்கல்வியை முடித்த பிறகு, இருவரும் தமிழ் ஊடகத்துறைக்குத் திரும்புவர்.

“பலரைச் சந்திக்கவும் சமூகத்திற்கு ஏற்ற கதைகளை எழுதவும் தமிழ் முரசு எனக்கு வாய்ப்பளித்தது. அதிலிருந்துதான் செய்தித்துறையின் மீதான ஆர்வம் மேலும் வளர்ந்தது,” என்று செய்தியறையில் பெற்ற அனுபவத்தை நினைவுகூர்ந்தார் வித்யா.

வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து செய்தி எழுதிய அனுபவம் பற்றிப் பகிர்ந்த அவர், “நான் எழுதிய செய்தியைப் படித்துவிட்டு, அவர்களுக்கு எவ்வாறு உதவுவது எனக் கேட்டு மின்னஞ்சல் வந்தபோது என் பணியின் நோக்கம் முழுமையடைந்ததை உணர்ந்தேன்,” என்றார்.

சிறந்த இருமொழித் திறனோடு தொடர்ந்து ஊடகத்துறைக்கு நற்பங்களிக்க வித்யா விரும்புகிறார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், “தமிழ் ஊடகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் வரும் தலைமுறைகளுக்கு மொழி வளத்தைக் கொண்டுசேர்க்கவும் புதிதாக அறிமுகம் கண்டுள்ள உபகாரச் சம்பளம் இளையர்களுக்கு வாய்ப்பளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

எஸ்பிஎச் மீடியா வழங்கும் செய்தித்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள சிவாணி, செய்தித்துறை மூலம் தொடர்ந்து சமூகத்தின் குரலாகத் திகழ விரும்புகிறார்.

“நான் மேற்கொள்ளும் பணி எனக்கு அப்பாற்பட்டு மற்றவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே என் ஆசையாக இருந்தது,” என்றார் இவர்.

உபகாரச் சம்பளம் பெற்ற கல்விமான்களின் பங்கு குறித்து கருத்துரைத்த தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர், “செய்தித்துறையில் சிறந்து விளங்குவதுடன் மேலும் பல இளையர்களை இத்துறை நோக்கி ஈர்க்கும் உந்துசக்தியாக இவர்கள் திகழ்வர்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டு மொத்தம் ஐந்து கல்விமான்களுக்கு எஸ்பிஎச் மீடியா உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டன.

தமிழ் முரசுடன் இணையவுள்ள இருவருடன் சேர்த்து, எஸ்பிஎச் மீடியா செய்தித்துறை உபகாரச் சம்பளத்தை மேலும் இருவரும், எஸ்பிஎச் மீடியா தெமாசெக் அறக்கட்டளை உபகாரச் சம்பளத்தை ஒருவரும் பெற்றுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்