சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் தலா 100 லிட்டர் எண்ணெய்யை வெளியேற்றிய விவகாரத்தில் இரண்டு கப்பல் நிறுவனங்கள் மீது செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
தனித்தனி நிகழ்வுகளில், ஹெலனிக் ஓவர்சீஸ் மெரிடைம் எண்டர்பிரைஸஸ், லெத் இன்கார்கோ மரின் சர்வீசஸ் ஆகியவை ஒவ்வொன்றின்மீது கடல் தூய்மைக்கேட்டுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன.
குற்றப்பத்திரிகையின்படி, கச்சா எண்ணெய்க் கப்பலான பசிஃபிக் ஏ டோரோட்சியின் முகவராக லெத் இன்கார்கோ மரின் சர்வீசஸ் இருந்தது.
2022 நவம்பர் 29ஆம் தேதி, பசிஃபிக் ஏ டோரோட்சி, மற்றோர் எண்ணெய் நிறுவனமான மரியா கோசுலிச்சிடமிருந்து உயர் கந்தக எரிபொருள் எண்ணெய்யைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட 100 லிட்டர் உயர் கந்தக எரிபொருள் எண்ணெயை அதன் மேற்தளத்திலும் சிங்கப்பூர் நீரிலும் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய்க் கப்பலான ‘ஸ்டார் புரொஸ்பரட்டி’யின் முகவராக இருந்த ஹெலனிக் ஓவர்சீஸ் மரின்டைம் எண்டர்பிரைஸ், 2023 ஜனவரி 9ஆம் தேதி, மற்றொரு எண்ணெய் உற்பத்தியாளரான எம்டி டெர்ரமில் இருந்து குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய்யைப் பெற்றது. அப்பொழுது ஸ்டார் குழாய் உடைந்து எண்ணெய் கடலில் கசிந்துவிட்டது.

