ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர் கரையில் நங்கூரமிட்ட இரு கப்பல்களைப் புறப்பட்ட இடத்துக்கே அதிகாரிகள் திருப்பிவிட்டனர்.
அவற்றில் தெரிவிக்கப்படாத நச்சுக் கழிவுகள் இருந்ததாக நம்பப்படுகிறது.
ஆபத்தான நச்சு எஃகு உலை தூசிக் கழிவுகளைக் கொண்ட அந்த நச்சு சரக்கு ஜூலை மாதம் அல்பேனியாலிருந்து இத்தாலிக்குப் புறப்பட்டது.
நச்சு எஃகு உலை தூசியில் துத்தநாகம், ஈயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. அவை நிலத்தில் கொட்டப்படும்போது கசிந்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தும். அத்தூசி கடுமையான கண், தோல், நுரையீரல் எரிச்சலுக்கு வழிவகுக்கும்; புற்றுநோயையும் ஏற்படுத்தும்.
இத்தாலியில் டேனிஷ் கப்பல் நிறுவனமான மெர்ஸ்க்கின் கேம்ப்டன், கேன்டோர் ஆகிய இரு கப்பல்களில் அந்தச் சரக்கு ஏற்றப்பட்டது. கேம்ப்டன் 41 கொள்கலன்களையும் கேன்டோர் 61 கொள்கலன்களையும் எடுத்துச் சென்றன.
அக்கப்பல்கள் தாய்லாந்து நோக்கிச் சென்றதாக ‘பேசல் ஆக்ஷன் நெட்வொர்க் ’ என்ற கண்காணிப்பு அமைப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வழியில் சிங்கப்பூர் ஒரு நிறுத்தமாக தெரிய வருகிறது.
பேசல் ஒப்பந்தம் என்பது கழிவுக் கடத்தலைக் குற்றமாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தமாகும். அதன்கீழ், கழிவுகளை ஏற்றுமதி செய்பவர் அல்லது உருவாக்குபவர், கழிவுகள் அனுப்பப்படும் நாட்டிடம் இருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், நச்சுத்தன்மை வாய்ந்த சரக்குகளைப் பற்றி போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்று பேசல் ஆக்ஷன் நெட்வொர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்கு ஆசியாவுக்குச் செல்லும் வழியில் ஒரு கட்டத்தில், மற்ற நாடுகளிலிருந்து சட்டவிரோத கழிவுகள் கொட்டப்படுவது பரவலாக உள்ளது. மெர்ஸ்க் கேம்ப்டன், மெர்ஸ்க் கேன்டோர் ஆகிய இரு கப்பல்களும், மிகவும் அசாதாரணமான நீண்டகாலத்திற்கு ரேடாரில் இருந்து விலகிச் சென்றன என்று அது கூறியது.
மெர்ஸ்க் கேம்ப்டனின் தானியங்கி அடையாள அமைப்பு (ஏஐஎஸ்) ஜிபிஎஸ் ஜூலை 31 அன்று அணைக்கப்பட்டது, மேலும் அது திட்டமிடப்பட்ட ஆகஸ்ட் 1 கப்பல் கேப் டவுனில் நங்கூரமிடத் தவறிவிட்டது. மெர்ஸ்க் கேன்டோர் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 19க்கு இடையில் ரேடாரில் இருந்து விலகிச் சென்றது.
அல்பேனியா, போக்குவரத்துப் பாதையுள்ள நாடுகள், தாய்லாந்து ஆகியவற்றை கண்காணிப்புக் குழு, அது குறித்து எச்சரித்தது.
ஆகஸ்ட் 18ஆம் தேதி, மெர்ஸ்க் கேம்ப்டன் அதன் 41 கொள்கலன்களை சிங்கப்பூரில் இறக்கியதாக நம்பப்படுகிறது. மறுநாள், மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனமான ‘எஸ்ஏ’ நிறுவனக் கப்பலுக்கு அந்தக் கொள்கலன்கள் மாற்றப்பட்டன. அக்கப்பல் ஆகஸ்ட் 21ஆம் தேதி இத்தாலி செல்லத் திட்டமிட்டதாக கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
இரண்டாவது கப்பலான மெர்ஸ்க் கேன்டோர், ஆகஸ்ட் 24 அன்று சிங்கப்பூர் நகருக்குள் நுழைந்தது. கடல்சார் கண்காணிப்புத் தளமான marinetraffic.com மெர்ஸ்க் கேன்டோர் ஆகஸ்ட் 25 அன்று பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நங்கூரமிட்டதைக் காட்டியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு பதிலளித்த, தேசியச் சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர்க் கடல்துறை துறைமுக ஆணையம் ஆகஸ்ட் 26 அன்று, அறிவிக்கப்படாத அபாயகரமான கழிவுகள் இருப்பதாகக் கூறப்படும் கொள்கலன்களைக் கொண்ட இரு மெர்ஸ்க் கப்பல்கள் சிங்கப்பூர் நோக்கி வருவதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறின.
பேசல் ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் 1996ல் கையெழுத்திட்டது.
“கொள்கலன்களில் உள்ள பொருள்கள் தொடர்பான ஊகங்களின் அடிப்படையில், நிறுவனம் தற்போது சிங்கப்பூர் அதிகாரிகளுடனும், அது செயல்படும் கப்பல் நிறுவனத்துடனும் ஒத்துழைத்து, கொள்கலன்கள் அல்பேனியாவுக்கு சிறந்த வழியில் திருப்பி அனுப்பப்படுவதை உறுதிசெய்கிறது” என்று மெர்ஸ்க் ஆகஸ்ட் 14ஆம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்தது.
அமெரிக்கா, ஐப்பான், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளிலிருந்து சட்டபூர்வ, சட்டவிரோதக் கழிவுகளை அதிக அளவில் கொட்டும் இடமாக தென்கிழக்கு ஆசியாவில் மலேசியா, வியட்னாம், தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகள் திகழ்வதாக போதைப்பொருள், குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேசல் ஆக்ஷன் நெட்வொர்க் கொடுத்த தகவலின் அடிப்படையில், மார்ச், ஜூன் மாதங்களுக்கு இடையில், மலேசியத் துறைமுகங்கள் சட்டவிரோத மின் கழிவுகள் என்று சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கொள்கலன்களைக் கைப்பற்றின. குறைந்தது 106 கொள்கலன்கள் மின் கழிவுகளைக் கொண்டவை.