காஸா போர் தொடங்கி 17 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய 50,000க்கும் மேற்பட்ட வீரர்களில் சிங்கப்பூரர்கள் இருவரும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
அவர்கள் இஸ்ரேலியக் குடியுரிமையுடன் குறைந்தது ஒரு வெளிநாட்டுக் குடியுரிமையையும் வைத்திருந்தனர்.
இஸ்ரேலிய அரசு சாரா அமைப்பான ‘ஹட்ச்லாச்சா’, அந்நாட்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.
ஹட்ச்லாச்சா பெற்ற இந்தத் தரவுகள் குறித்து பிப்ரவரி 11ஆம் தேதியன்று பிரிட்டிஷ் புலனாய்வுச் செய்தித் தளமான ‘டிகிளாசிஃபைட் யுகே’ முதலில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதியன்று இஸ்ரேலியச் செய்தி நிறுவனமான ‘யெடியோத் அஹ்ரோனோத்’, பிப்ரவரி 15ஆம் தேதியன்று கத்தாரின் ‘அல் ஜசீரா’ ஊடகம் ஆகியவையும் இச்செய்தியை வெளியிட்டன.
இந்தத் தரவுகளின்படி, இஸ்ரேலிய ராணுவத்துக்குச் சேவையாற்றியவர்களில் ஒருவர் இஸ்ரேல்-சிங்கப்பூர் என இருநாட்டுக் குடியுரிமை கொண்டவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
மற்றொருவர் சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலியக் கடப்பிதழ்களுடன் சேர்த்து மேலும் சில நாடுகளின் கடப்பிதழ்களையும் வைத்துள்ள ‘பல நாட்டுக் குடியுரிமை’ கொண்டவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர்ச் சட்டம் இருநாட்டுக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. இருப்பினும், 21 வயதை எட்டும் வரை இரண்டு கடப்பிதழ்களை வைத்திருக்க முடியும். அதன் பிறகு, அவர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமையை விட்டுக்கொடுக்கிறார்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆண் குடிமகன் ஒருவர் கட்டாய ராணுவச் சேவைச் சட்டத்திற்கு உட்பட்டிருந்து, தமது தேசியச் சேவையை முடிக்கவில்லை என்றால், அவரது குடியுரிமைத் துறப்பு விண்ணப்பத்தை அரசாங்கம் நிராகரிக்கலாம்.
அரசியலமைப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட எவரேனும் வெளிநாட்டுக் கடப்பிதழுக்கு விண்ணப்பித்தாலோ அதைப் புதுப்பித்தாலோ பயணத்திற்குப் பயன்படுத்தினாலோ அரசாங்கம் அவரது சிங்கப்பூர்க் குடியுரிமையை ரத்து செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 18ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவொன்றில், உள்துறை அமைச்சுக்கான முன்னாள் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், சிங்கப்பூர்ச் சட்டப்படி குடிமக்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளில் ஆயுதம் ஏந்திப் போரிட முடியாது என்பதைக் குறிப்பிட்டார்.
“நமது அதிகாரிகள் இதனை முழுமையாகவும் நேர்மையாகவும் கையாள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தத் தகவல் துல்லியமானதாக இல்லையென்றால், அது தெளிவுபடுத்தப்படும் என்று நம்புகிறேன். எதுவாக இருந்தாலும், வெளிப்படையான விசாரணை மட்டுமே சிங்கப்பூரின் நேர்மை, ஒருமைப்பாட்டின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும்,” என்றார் அவர்.
ஹட்ச்லாச்சா பெற்ற ஐடிஎஃப் தரவுகள், இஸ்ரேலிய ராணுவத்தில் குறைந்தது 12,135 வீரர்கள் அமெரிக்கக் கடப்பிதழ் வைத்திருப்பதாகக் காட்டுகின்றன. இது மற்ற நாடுகளைவிடப் பல மடங்கு அதிகமாகும். கூடுதலாக 1,207 வீரர்கள் அமெரிக்க, இஸ்ரேலியக் கடப்பிதழ்களுடன் மற்ற நாடுகளின் கடப்பிதழ்களையும் வைத்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. குறைந்தது 6,127 வீரர்கள் பிரெஞ்சுக் கடப்பிதழ் வைத்துள்ளனர். 2025ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இஸ்ரேலிய ராணுவத்தில் குறைந்தது 5,067 ரஷ்யர்கள், 3,901 ஜெர்மானியர்கள், 3,210 உக்ரேனியர்கள் மற்றும் 1,686 பிரிட்டிஷ் குடிமக்களும் பணியாற்றி வருகின்றனர்.
பல நாடுகளின் குடியுரிமை கொண்ட வீரர்கள், அந்தந்த நாடுகளின் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கணக்கிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

