கம்போடியா, தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இரு சிங்கப்பூரர்கள்மீது மோசடி குற்றச்சாட்டு

2 mins read
540cc5d9-c958-43e3-b1b7-08c7a634bef4
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் மோசடித் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இரு சிங்கப்பூரர்கள். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

எல்லை தாண்டிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனும் சந்தேகத்தின்பேரில் தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட இரு சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

நவம்பர் 11ஆம் தேதி, நாடு திரும்பிய அவர்களை மோசடித் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்ததாக வியாழக்கிழமை (நவம்பர் 13) சிங்கப்பூர்க் காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்ட ஓங் குவாங் வீ, சீ ஜியான்ஹாவ் இருவருக்கும் வயது 44.

பேங்காக்கில் தாய்லாந்து காவல்துறை நடத்திய சோதனையில் ஓங் குவாங் பிடிபட்டார்.

மோசடிக் கும்பல் ஒன்றுடன் அவருக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரர்களைக் குறிவைத்து, அரசாங்க அதிகாரிகளைப் போன்று ஆள்மாறாட்ட மோசடிகளைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் மியன்மாரில் செயல்பட்டுவந்த மோசடி நிலையத்தை அக்கும்பல் நடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.

மியன்மார் மோசடி நிலையத்தை அவர் நிர்வகித்ததாகவும் அதன் மீது அந்நாட்டு அதிகாரிகள் மோசடித் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது அவர் தாய்லாந்துக்குத் தப்பிச்சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் மீது கணினிப் பொருள்களை அனுமதியின்றி அணுகியதாக வியாழக்கிழமையன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கம்போடியாவின் கிராங் பாவெட் பகுதியில் தொலைத்தொடர்பு மோசடிகளில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டாவது நபரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்தது.

அந்த நபர், அக்குழுவின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

சிங்கப்பூரில் இருக்கும் இரு சந்தேகப் பேர்வழிகளின் வங்கிக் கணக்குகளும் மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அவர் மீது ஒரு மோசடிக் குற்றச்சாட்டும் மோசடி மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி சொத்து வாங்கியிருக்கக்கூடும் என மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்