இஸ்ரேலிய ராணுவத் தொடர்பு அமைப்பில் தொண்டூழியம் செய்த சிங்கப்பூரர் இருவர் சண்டையிடவில்லை

இஸ்ரேலிய ராணுவத் தொடர்பு அமைப்பில் தொண்டூழியம் செய்த சிங்கப்பூரர் இருவர் சண்டையிடவில்லை

2 mins read
e2495d28-8cd1-4430-9763-4c52ba9722bd
சார்-எல் இணையத்தளம். - படம்: சார்-எல்

கடந்த 2016ஆம் ஆண்டில் சார்-எல் தொண்டூழியப் படைகள் (Sar-El Volunteer Corps) அமைப்பில் தொண்டூழியம் செய்த சிங்கப்பூரர்கள் இருவர் இஸ்ரேலியத் தற்காப்பு படைகளுடன் (ஐடிஎஃப்) எவ்வித ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விருவரில் ஒருவர் அந்த அமைப்பில் தொண்டூழியத்தில் ஈடுபடுமாறு ஊக்குவித்து வலைப்பதிவைச் செய்திருந்தார். அந்த தந்தை மகன் இணையை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை 2025ஆம் ஆண்டு தொடர்புகொண்டதையடுத்து மகன் அப்பதிவை அகற்றியதாக உள்துறை, தற்காப்பு அமைச்சுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்தன.

அந்த வலைப்பதிவை சமூக ஊடகப் பயனர்கள் முன்னதாக இம்மாதம் பகிர்ந்ததைத் தொடர்ந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உள்துறை, தற்காப்பு அமைச்சுகள் இரண்டும் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட இருவரும் 2016 டிசம்பரில் சுமார் இரண்டு வாரங்களுக்கு சார்-எல் அமைப்புடன் தொண்டூழியத்தில் ஈடுபட்டதாக அமைச்சுகள் தெரிவித்தன.

தனது மகன், அவரின் பள்ளியின் தொண்டூழியத் திட்டத்தின் அங்கமாக சார்-எல் அமைப்புடன் செயல்படலாமா என்று தந்தை, சிங்கப்பூர் அதிகாரிகளிடம் எழுத்து வடிவில் கேட்டிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் மகன், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்‌ஷியர் மாநிலத்தில் உள்ள ஹோல்டர்னெஸ் பள்ளியில் பயின்று வந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டுபிடித்தது.

சிங்கப்பூர் சட்டப்படி சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ராணுவ அமைப்புகளில் பணியாற்றக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொண்டதாக உள்துறை, தற்காப்பு அமைச்சுகள் தெரிவித்தன.

சார்-எல் அமைப்பில் ஈடுபடும் தொண்டூழியர்கள் ஐடிஎஃப் அல்லது இஸ்ரேலுக்குத் தங்களை அர்ப்பணிப்பதில்லை என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் சண்டை சார்ந்த பொறுப்புகளில் ஈடுபடுவதில்லை என்றும் ஆயுதம் ஏந்துவதும் இல்லை என்றும் இருவரும் அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். பொருள்களைப் பொட்டலமிடுவது அல்லது பெட்டிகளில் வைப்பது, சாயம் பூசுவது, சுத்தம் செய்து, சமைப்பது போன்ற பணிகளில்தான் சார்-எல் தொண்டூழியர்கள் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

2016ல் சார்-எல் இணையத்தளத்தில் இடம்பெற்ற தகவல்கள், தந்தை அளித்த விவரங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சார்-எல் தொண்டூழியத் திட்டத்தில் பங்கேற்பது, வெளிநாட்டு ராணுவத்தில் செயல்படுவதற்குக் சமமாகாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள், தந்தையிடம் தெரிவித்தனர்.

சார்-எல் தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட மகனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதில் இருக்கும் அபாயங்களைத் தெரிந்துகொண்டேதான் அவர் பங்கேற்றிருக்கிறார்.

தந்தையின் மின்னஞ்சலுக்கு அதிகாரிகள் பதிலளிப்பதற்குள் தந்தை, மகன் இருவரும் சார்-எல் அமைப்புடனான இரண்டு வாரகாலத் தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு முடித்திருந்தனர்.

2016க்குப் பிறகு சார்-எல் தொடர்பான இத்தகைய கோரிக்கைகள் எதையும் தாங்கள் கையாளவில்லை என்று உள்துறை, தற்காப்பு அமைச்சுகள் கூறின. 2025ல் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இருவரையும் தொடர்புகொண்டதையடுத்து 2016 நிகழ்வுகள் தொடர்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனினும், தற்போது சார்-எல், ஐடிஎஃப் மற்றும் அதன் தொண்டூழியர்களுக்குப் பணியாற்றக் கடமைப்ப்பட்டுள்ளதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சுகள் குறிப்பிட்டன.

இன்றைய நிலவரப்படி சார்-எல் போன்ற அமைப்புகளுக்குப் பணியாற்றுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்று இரு அமைச்சுகளும் சுட்டின. சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்பு, அக்கறைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது சிங்கப்பூர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்