ஈசூனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) இரவு 11.10 மணியளவில் தனிநபர் நடமாட்டச் சாதனமும் (PMD) ஒரு காரும் சம்பந்தப்பட்ட இடையே விபத்து நடந்துள்ளது.
அதில் காயமடைந்த 13 வயதுச் சிறுவர்கள் இருவர் சுயநினைவோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த காரின் முன்பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காணொளியில் பதின்ம வயதினர் இருவரும் அந்தச் சாதனத்தில் அமர்ந்தபடி சாலையைக் கடப்பதும் வாகனம் அவர்களை நெருங்குவதும் தெரிகிறது. போக்குவரத்து விளக்குகள் காருக்குச் சாதகமாகப் பச்சை நிறத்தில் இருப்பதும், வலதுபுறமாக கார் வளைய முயலும்போது அதன் பாதையில் வந்த சிறுவர்கள் அதனை மோதுவதும் பதிவாகியுள்ளது.
தனிநபர் நடமாட்டச் சாதனத்தை கார் மோதியதில் இரு சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். ஈசூன் ரிங் ரோடு, ஈசூன் அவென்யூ 2 ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் நடந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை உறுதிசெய்தது.
சிறுவர்கள் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

