சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி

2 mins read
c36a262b-a00d-4f64-a845-b6207f6407cc
15வது சிங்கப்பூர் - இந்தோனீசிய ஆறு இருதரப்பு பொருளியல் செயல்பாட்டு குழுக்களின் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்ற துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் (வலது), இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லங்கா ஹர்தார்த்தோ. - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் இருதரப்புப் பொருளியல் உறவுகளை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை மறுவுறுதிபடுத்தியுள்ளன.

15வது சிங்கப்பூர் - இந்தோனீசிய ஆறு இருதரப்பு பொருளியல் செயல்பாட்டு குழுக்களின் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இரு நாடுகளும் பங்கேற்றன.

துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங்கும் இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லங்கா ஹர்தார்த்தோவும் கூட்டத்தை இணைந்து நடத்தினர்.

பாத்தாம், பிந்தான், கரிமுன் ஆகிய வட்டாரங்களிலும் சிறப்புப் பொருளியல் வட்டாரங்கள், முதலீடுகள், மனிதவளம், போக்குவரத்து, சுற்றுலா ஆகிய பல துறைகளிலும் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான பொருளியல் ஒருங்கிணைப்பை அடுத்த கட்டத்துக்குக் எடுத்துச்செல்ல அமைச்சர்நிலைக் கூட்டம் தளமாக விளங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான இருதரப்பு வணிகம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு அது 57.6 பில்லியன் டாலரை எட்டியது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வணிகப் பங்காளிகளில் இந்தோனீசியா முன்னணி வகிக்கிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தோனீசியாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு நாடாக சிங்கப்பூர் உள்ளது. கடந்த ஆண்டு அந்த முதலீடு 20.1 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.

இரு அமைச்சர்களும் வணிகங்களிலும் முதலீட்டு வாய்ப்புகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றிக் கலந்துரையாடினர்.

கூட்டத்தின்போது இரண்டு வணிக ஏற்பாடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அவற்றுள் ஒன்று செம்கார்ப் நிறுவனத்துக்கும் பாத்தாம்ராயா சக்செஸ் பெர்காஸா நிறுவனத்துக்கும் இடையிலானது.

இரு நிறுவனங்களும் பாத்தாம், பிந்தான், கரிமுன் வட்டாரங்களில் உள்ள தொழிற்பூங்காக்களில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தின.

சிங்கப்பூரின் பகுதிமின்கடத்தி நிறுவனச் சங்கத்துக்கும் இந்தோனீசியாவின் வர்த்தகத் தொழிற்சபைக்கும் இடையே இணக்கக் குறிப்பும் கையெழுத்தானது.

சிங்கப்பூரிலும் இந்தோனீசியாவிலும் உள்ள பகுதிமின்கடத்தி, மின்சாதன நிறுவனங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரண்டு அமைப்புகளும் முயற்சி செய்யும்.

குறிப்புச் சொற்கள்