சென்ற ஆண்டு 36 வேலையிட உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவற்றில் ஆறு, போக்குவரத்து விபத்துகளால் ஏற்பட்டவை என்றும் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள் என்றும் மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு இணையவழி ஊழியர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு அல்லாத வேலை தொடர்பான காயங்கள் குறித்த தரவுகள் மனிதவள அமைச்சிடம் இல்லை.
இணையவழி ஊழியர்கள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இணையவழிச் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஏற்படும் வேலை தொடர்பான காயங்கள், தொழில்சார் நோய்கள் குறித்துத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
இணையவழி ஊழியர்கள், சாலைகள், பொதுப் பாதைகளில் நீண்ட நேரம் செலவிடுவதோடு தங்கள் வேலைச் சூழலின் மீது குறைந்த அளவிலான கட்டுப்பாட்டையே கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.
இருப்பினும், பணியிட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 43ஆகப் பதிவான அது தற்போது குறைந்ததால், பணியிட உயிரிழப்பு விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 0.96ஆக உள்ளது.
இணையவழி ஊழியர்கள் 74 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அத்தகைய சம்பவங்களில் 60, போக்குவரத்து விபத்துகள். 12 சம்பவங்கள் வழுக்கி விழுதல், தடுமாறுதல், கீழே விழுதல் தொடர்பானவை.
புதன்கிழமை (25 மார்ச்) தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் நிகழ்ச்சியில் உரையாற்றிய மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையைப் பற்றிப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
பணியிடத்தில் காயமடைந்தோரில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் விநியோக ஓட்டுநர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளதாகத் திரு தினேஷ் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக, 2025ஆம் ஆண்டில் வேலையிட மரணங்களில், 15 உயிரிழப்புகளுக்கு வாகன விபத்துகளே காரணமாக அமைந்தன. ஒப்புநோக்க 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11ஆகப் பதிவானது.
பணியிட உயிரிழப்புகளும் கடுமையான காயம் விளைவித்த சம்பவங்களும் கட்டுமானம், உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து அதிகம் பதிவாயின.
பணியிடப் பாதுகாப்பு, சுகாதார அபாயங்களைக் கண்டறிந்து நிகழ்நேர எச்சரிக்கைகளை வழங்குவதற்காகக் காணொளிப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது போன்ற பிற தீர்வுகளை அமைச்சு பரிசீலித்து வருவதாகத் திரு தினேஷ் தெரிவித்தார்.
தற்போது 14 கட்டுமானத் தளங்களில் ஜூன் மாதம் வரை செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் மாதத்திற்குப் பிறகு கட்டட, கட்டுமான ஆணையம், பொதுத் துறை அமைப்புகளுடன் இணைந்து பொதுத் துறைக் கட்டுமானத் திட்டங்களுக்குக் காணொளிப் பகுப்பாய்வை ஒரு கட்டாயத் தேவையாக மாற்றுவது குறித்து மனிதவள அமைச்சு பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இணையவழி ஊழியர்களுக்கான சட்டத்தைப் பற்றித் தமது உரையில் வலியுறுத்திய திரு தினேஷ், அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வகுப்பதற்காக, அரசு நிறுவனங்கள், இணையவழிச் சேவை வழங்கும் நிறுவனங்கள், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், இணையவழி ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இணையவழி ஊழியர் பாதுகாப்புப் பணிக்குழு ஒன்றை மனிதவள அமைச்சு அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இணையவழி ஊழியர்களைத் தவிர்த்து மற்ற ஊழியர்கள் வேலையிடங்களில் கடுமையாகக் காயமடைந்த சம்பவங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 587ஆக இருந்தது. 2025ஆம் ஆண்டில் அது 586ஆகப் பதிவானது.
கடுமையான காயங்களுக்கான முதன்மைக் காரணங்களாக சறுக்குதல், தடுமாறுதல், கீழே விழுதல் ஆகியவை அமைந்தன.
உயரத்திலிருந்து கீழே விழுதல், இயந்திரங்கள் தொடர்பான விபத்துகள் உள்ளன அடுத்த நிலைகளில் உள்ளன.

