‘குவீன்ஸ்வே ஷாப்பிங் சென்டர்’ கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தலைகுப்புறக் கவிழ்ந்ததில் 61 மற்றும் 91 வயதுடைய பெண்கள் இருவர் காயமுற்றனர்.
சனிக்கிழமை (டிசம்பர் 7) நேர்ந்த அவ்விபத்து குறித்து மாலை 4.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அலெக்சாண்ட்ரா சாலையில் நேர்ந்த அவ்விபத்தில் நான்கு கார்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அவ்விபத்தில் 61 வயதுப் பெண் கார் ஓட்டுநரும் அவரது காரிலிருந்த 91 வயதுப் பெண் பயணியும் காயமுற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
அவ்விருவரும் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இழுவை வாகன நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இரவு 8 மணியளவில் அந்தக் காரை மீட்டதாகவும் அதனை மீட்க கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் காவல்துறை விசாரித்து வருகிறது.

