தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டுமானத் தளத்தில் கனரக இயந்திரம் விழுந்து இரண்டு ஊழியர்கள் மரணம்

2 mins read
557830f1-c7b3-4207-bec5-d3d63081cfb5
இந்த விபத்துடன் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் குறைந்தது ஆறு ஊழியர்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானத் தளத்தில் நேர்ந்த விபத்தால் உயிரிழந்துவிட்டனர்.  - படம்: சாவ் பாவ்

கட்டுமானத் தளம் ஒன்றில் கனரக இயந்திரம் விழுந்ததால் சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டுமானத் தளப் பொறியாளர் ஒருவரும் பங்ளாதேஷி கட்டுமான ஊழியர் ஒருவரும் உயிரிழந்தனர்.

இருவரும் செப்டம்பர் 17ஆம் தேதி லெண்ட்டோர் அவென்யூவில் உள்ள கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு-தெற்கு வழித்தடத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருந்த அவ்விடத்தில் பகல் 1.20 மணியளவில் இருவரும் விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நேர்ந்த இடத்திலேயே 39 வயது பங்ளாதேஷி ஊழியரது மரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். 38 வயதுடைய பொறியாளர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு சுயநினைவிழந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட காயங்கள் காரணமாகப் பின்னர் உயிரிழந்தார்.

விபத்துக்குப் பிறகு அதே மருத்துவமனைக்கு 32, 47 வயதுடைய வேறு இரு ஊழியர்களும் கொண்டு செல்லப்பட்டனர். சிறு காயங்களுடன் அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

நான்கு ஊழியர்களும் கார்கிரீட் மீது இருந்த ஓர் உருளை ஏற்றப்பொறியைக் கையாண்டபோது, அது சறுக்கி அவர்கள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. கனமான பொருள்களைத் தூக்குவதற்குப் பொதுவாக இந்த உருளை ஏற்றப்பொறி பயன்படுத்தப்படும்.

காவல்துறையினர் விபத்து குறித்து பகல் 1.25 மணிக்குத் தகவல் அறிந்ததாகக் கூறினர். விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகின்றது.

விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் செய்தியனுப்பும் தளங்களில் வலம்வர, அவற்றில் பாதுகாப்பு உடைகள், தலைக்கவசங்களுடன் இரண்டு ஊழியர்கள் தரையில் குப்புற கிடப்பதைக் காண முடிகிறது.

மூன்றாவது ஊழியர் ஒருவர் உதவுவதையும் பார்க்க முடிகிறது.

இந்த விபத்துடன் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் குறைந்தது ஆறு ஊழியர்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானத் தளத்தில் நேர்ந்த விபத்தால் உயிரிழந்துவிட்டனர். செப்டம்பர் 17ஆம் தேதி வேலையிட விபத்தால் நேர்ந்த மரணம், வடக்கு-தெற்கு வழித்தடத்தின் கட்டுமானத் தளத்தில் நடந்துள்ள இரண்டாவது சம்பவமாகும்.

விபத்தில் சம்பந்தப்பட்ட நான்கு ஊழியர்களும் ‘விஎஸ்எல் சிங்கப்பூர்’ நிறுவனத்தாரால் வேலையில் அமர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

லெண்ட்டோர் அவென்யூ கட்டுமானத் தளத்தில் முதன்மை கட்டுமான ஒப்பந்த நிறுவனமானது ‘சாங்யோங் என்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ எனும் தென்கொரிய நிறுவனமாகும்.

அங் மோ கியோ அவென்யூ 9, சுங்கை சிலேத்தார் இடையே வடக்கு-தெற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியைக் கட்டும் $537.1 மில்லியன் ஒப்பந்தத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் 2018ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு வழங்கியது.

குறிப்புச் சொற்கள்