உலகில் முதல்முறையாக நடத்தப்பட்ட 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணியும் கலந்துகொண்டு விளையாடியது.
அஸர்பைஜானின் பாகு நகரில் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி நிறைவடைந்த அந்தப் போட்டியில் 189 அணிகள் பங்கேற்றன.
ஏழு நாள்களில் பத்துப் போட்டிகளில் விளையாடிய சிங்கப்பூர் அணி, 141வது இடத்தைப் பிடித்தது.
எட்டுப் பேர் கொண்ட இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. சிங்கப்பூரின் இளம் ‘கப்ஸ்’ அணி எஸ்வாட்டினி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முதல் 90 இடங்களுக்குள் வரவேண்டும் என்ற இலக்கை எட்டத் தவறிய போதிலும், இப்போட்டித் தொடரிலிருந்து பல சாதகமான அம்சங்களை கற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறினார் சிங்கப்பூர் யு-15 அணியின் பயிற்சியாளர் அஷ்ரஃப் அரிஃபின்.
பந்தை நகர்த்தி ஆட்டத்தை கட்டமைத்தது மற்றும் களத்தின் பல்வேறு பகுதிகள் வழியே பந்தை முன்னெடுத்துச் சென்ற விதம் உள்ளிட்டவற்றை சிங்கப்பூர் இளம் அணி கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
“கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை கோல்களாக மாற்றுவதிலும் நாங்கள் இன்னும் திறம்படச் செயல்பட வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அக்டோபர் 24ஆம் தேதி தகுதிச்சுற்று ஆட்டங்களைத் தொடங்கிய சிங்கப்பூர், ‘பி’ பிரிவில் தனது முதல் நான்கு ஆட்டங்களில் குவாட்டமாலா (1-0), ஹோண்டுராஸ் (3-0), கனடா (6-0), கினியா (6-0) ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்தது.
இருப்பினும், அமெரிக்க சமோவாவை 12-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைச் சிங்கப்பூர் தொடங்கியது.
காற்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 189 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் இந்த பிரம்மாண்டத் தொடரில் பங்கேற்றனர்
