வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஏப்ரல் மாதத்தில் பயனீட்டு, பராமரிப்புக்கான கட்டணங்களில் தள்ளுபடிகளைப் பெறவிருக்கின்றன.
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்களில் அதுவும் அடங்கும்.
நிதியமைச்சு செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில், தகுதிபெறும் குடும்பங்கள் ஏப்ரல் மாதத்தில் $190 வரையிலான யு-சேவ் தள்ளுபடிகளைப் பெறும் என்று தெரிவித்தது.
சேவை, பராமரிப்புக் கட்டணங்களில் தகுதிபெறும் குடும்பங்கள் ஒரு மாதம் வரையிலான தள்ளுபடிகளைப் பெறும்.
வீட்டின் அளவைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடும்.
உதாரணமாக, நான்கறை வீடுகளில் வசிப்போர் $150 வரையிலான யு-சேவ் தள்ளுபடிகளைப் பெறுவர். அவர்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணங்கள் ஒரு மாதம் வரையிலான கழிவுகளைப் பெறுவர்.
ஓரறை, ஈரறை வீடுகளில் உள்ளோர் $190 வரையிலான யூ-சேவ் தள்ளுபடிகளையும் சேவை, பராமரிப்புக் கட்டணங்களில் ஒரு மாதக் கழிவுகளையும் பெறுவர்.
ஒட்டுமொத்தத்தில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி 2027ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் தகுதிபெறும் குடும்பங்கள் $570 வரையிலான யூ-சேவ் தள்ளுபடிகளையும் சேவை, பராமரிப்புக் கட்டணங்களில் மூன்றரை மாதம் வரையிலான தள்ளுபடிகளையும் பெறுவர் என்று நிதியமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தள்ளுபடிகளுக்குத் தகுதிபெற கழக வீடுகளில் வசிப்போரில் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரராக இருக்கவேண்டும்.
ஒட்டுமொத்த வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தால் வீட்டில் தங்கியிருக்கும் வாடகைதாரரில் ஒருவராவது சிங்கப்பூரராக இருக்கவேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துகளை வைத்திருக்கும் குடும்பங்கள் யூ-சேவ் தள்ளுபடிகளுக்குத் தகுதிபெறமாட்டா.
யு-சேவ் தள்ளுபடிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் வழங்கப்படுகின்றன.
மத்திய கிழக்கு நிலவரத்தைப் பொருத்து வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் அப்பால் கூடுதல் திட்டங்களை அறிவிக்க சிங்கப்பூர் அரசாங்கம் தயாராக இருப்பதாய் இம்மாதம் 18ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.


